Prime Minister Wickramasinghe Pledges to Increase Women Participation in Politics

ஆதார மூலம் : Search for Common Ground

பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்குழுவானது (Women Parliamentarian’s Caucus) பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பு, ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் மற்றும் ஐ.நா பெண்கள் ஆகிய அமைப்புக்களுடன் இணைந்து ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளரின் அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்த சர்வதேச மகளிர் தின நிகழ்வில் இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் தனதுரையில், சமகாலத்தில் கலந்துரையாடப்பட்டு வருகின்ற தேர்தல் முறைமை மறுசீரமைப்பின் மூலம் உள்ளூர், மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் பெண்களின் அரசியல் பங்கேற்பை 25 சதவீதமாக அதிகரிக்கவுள்ளதாக உறுதியளித்தார். அத்தோடு இலங்கைப் பெண்களின் பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவதற்கும், நாட்டின் யுத்தத்தின் பின்னரான நல்லிணக்கச் செயன்முறையில் பெண்களின் ஈடுபாட்டை ஊக்குவிப்பதற்கும் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களை வலுப்படுத்தும் வகையிலான சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் உறுதியளித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்; “அரசியலில் பெண்களின் பங்குபற்றலை 25 சதவீதமாக அதிகரிப்பதற்கு தற்போதைய தேர்தல் முறைமையில் எவ்வகையான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்குழு முன்மொழிந்துள்ள ஆலோசனைகளும் பரிந்துரைகளும் ஏலவே எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. தற்போதைய அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணையாளருக்கும் இடையே சமகாலத்தில் நடக்கின்ற தேர்தல் முறைமை மறுசீரமைப்பு குறித்த கலந்துரையாடல்களின் போது நாம் இந்தப் பரிந்துரைகளை கவனத்தில் எடுத்திருக்கின்றோம். உண்மையில், தேர்தல்கள் ஆணையாளருடன் பல கலந்துரையாடல்களை செயற்குழு உறுப்பினர்கள் தாமாகவே நடத்தியுள்ளனர். சீர்திருத்தங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி முடிவொன்றுக்கு வரும் பொருட்டு மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் மாத முற்பகுதியில் சந்திக்கவுள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் செயற்குழுவினால் முன்மொழியப்பட்ட பரிந்துரைகளை நாம் வழங்கவுள்ளோம். இது ஒரு சிறந்த பரீட்சிப்பாக அமையுமென நான் கருதுகின்றேன். இதனைச் செய்து பார்ப்பதற்கான உறுதிப்பாட்டை நான் வழங்குகின்றேன்.

அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், இராஜதந்திரிகள், பெண் அரசியல் தலைவர்கள் மற்றும் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வருகைதந்த செயற்பாட்டாளர்கள் உட்பட சுமார் 300 பேர்கள் இந்நிகழ்வுக்கு சமூகமளித்திருந்தனர். இலங்கைப் பாராளுமன்றத்தின் சபாநாயகர் சமல் ராஜபக்ச, எதிர்கட்சித் தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா, ஐக்கிய நாடுகளுக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் சுபினை நண்டி மற்றும் இலங்கைக்கான அவுஸ்த்திரேலிய உயர்ஸ்தானிகர் ரொடின் மியுடி ஆகியோர் அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர். உயர்தொழில் துறைகளில் சிறந்து விளங்கிய 25 பெண்களின் அடைவுகளை அங்கீகரிக்கும் பொருட்டு அவர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டன. அதேவேளை, சமகாலத்தில் இலங்கைப் பெண்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் பற்றிய தொடரான குழுக் கருத்தாடல்களுடன் இந்நிகழ்வு நிறைவுற்றது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் கீழ் உலகளாவிய பெண்கள் முன்னெடுப்பின் (Global Women’s Initiative) நிதியளிப்புடன் அமுல்படுத்தப்பட்ட ‘உள்ளூராட்சியில் பெண்கள்’ எனும் செயற்திட்டத்தின் கீழ் நாம் இதுவரை காலமும் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காக மேற்கொண்டுவந்த முயற்சிகளுள் இது ஒரு முக்கிய மைல்கல்லாகும். குறித்த செயற்திட்டமானது குருநாகல், பதுளை மற்றும் அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த பெண் தலைமைகளை இலக்காகக் கொண்டமைந்திருந்தது. தேர்தல் சட்டம் தொடர்பாக, அதிலும் குறிப்பாக உள்ளூராட்சிச் சட்டம் குறித்து, சமகாலத்தில் முன்னெடுக்கப்படுகின்ற சட்டத்திருத்தங்களின் ஒரு பகுதியாக பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவ அதிகரிப்புத் தொடர்பான ஏற்பாடுகளை உள்வாங்குவதற்கு நாம் அரசியல் கட்சிகளுடன் மிக நெருக்கமாகப் பணியாற்றினோம். அதற்கு எமது உள்நாட்டு பங்காளர்களான பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பும் (WMC) யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான அமைப்பும் (AWAWSL) ஆதரவளித்திருந்தன.

Proposals by the Parliamentary Women’s Caucus

Proposals pg2