IWD 2015: Celebrating the life of our founder Sunila Abeysekara

சர்வதேச மகளிர் தினத்தில் பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பானது தனது 30 ஆண்டுகால செயல்நிலையைக் கொண்டாடுகின்றபடியினால் அதன் நிறுவுனரான சுனிலா அபயசேகரவின் வாழ்வைக் கொண்டாடுவதற்கான ஒரு தருணத்தை நாம் எடுத்துக் கொள்கின்றோம்.

ஆதாரமூலம்:Isis International

ஏன் சுனிலா மார்ச் 08ஆம் திகதியை நேசித்தாள்?

சுனிலா புற்று நோயின் நான்காம் படிநிலைக்கு உள்ளாகியுள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்ட பிற்பாடு அவருடன் சில பொழுதுகளைக் கழிப்பதற்காக 2003 மார்ச் 08ஆம் திகதி அளவில் நான் அவரிடம் சென்றிருந்தேன். பெண்கள் இயக்கங்கள் குறித்து எழுந்த சில புதிரான விடயங்களை விளங்கிக் கொள்வதற்கு எனக்கு உதவி தேவைப்பட்ட போதெல்லாம் நான் நாடிச் செல்லக்கூடிய தெளிவானதும் கூர்மையானதுமான ஒளியாக – எம்மில் பலருக்கும் இருப்பதைப் போலவே – எனக்கும் சுனிலா இருந்தாள். சர்வதேச மகளிர் தினம் தொடர்பான அவளது சிந்தனைகளைப் பற்றியும், பெண்கள் இயக்கத்தில் அவள் பயணித்த அவளது சுய பயணங்கள் பற்றியும் சர்வதேசப் பெண்கள் இயக்கங்கள் காணப்பட்ட இடங்கள் பற்றியும் அவளிடம் சில வினாக்களைத் தொடுப்பதற்கு நான் தீர்மானித்தேன். குறிப்பாக பெண்கள் தொடர்பான பீஜிங் உலக மாநாடு நடைபெற்று 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள இன்றைய நிலையில் அவளை நினைவுகூர்வதற்கான ஒருவழியாக இந்தப் பதிவுகளை ஏனையவர்களுடனும் பகிர்ந்துகொள்வதற்கு நான் எண்ணினேன்.

  • சுசன்னா ஜோர்ஜ், ISIS International இன் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் மற்றும் இந்நாள் பணிப்பாளர் சபைத் தலைவர்

Why I love International Women’s Day sound

Full interview with Sunila Abeysekera sound

முழுமையான நேர்காணலில் இருந்து சில பகுதிகள்

சுனிலா, நீங்கள் ஏன் சர்வதேச மகளிர் தினத்தை நேசிக்கின்றீர்கள்? அதில் அந்தளவுக்கு என்ன சிறப்பு இருக்கின்றது?

நல்லது. உலகம் பூராவுமுள்ள பெண்கள் மார்ச் மாதம் 08ஆம் திகதியைக் கொண்டாடுவது உன்னதமானது. கியூபா போன்ற சில நாடுகளில் மார்ச் 08 பொது விடுமுறை நாளாக உள்ளது. இது ஓர் உலகளாவிய தினம். உலகின் ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு நாட்டிலும் மார்ச் 08ஐ நினைவுகூர்கின்ற சில பெண்கள் உள்ளனர் என நான் நினைக்கின்றேன். இது மகளிர் இயக்கங்களின் ஓர் அங்கமாக இருக்கின்ற சர்வதேசத் தன்மை குறித்து எண்ணிப்பார்ப்பதற்கான ஒரு வழிமுறையாக உள்ளது.

இரண்டாவது விடயம் என்னவென்றால், மகளிர் தினத்தின் வரலாற்றையும் அதனை நாம் ஏன் கொண்டாடுகின்றோம் என்பதையும் பற்றி ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 08ஆம் திகதியில் நாம் நினைத்துப் பார்க்கின்றோம். ஐக்கிய அமெரிக்காவில் தமது உரிமைகளுக்காகப் போராடிய பெண் தொழிலாளர்கள் பற்றியதும், மார்ச் 08ஆம் திகதியை சர்வதேச மகளிர் தினமாகப் பிரகடனப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்த கிளாரா செட்கின் (Clara Zetkin) போன்ற சோசலிசப் பெண்கள் பற்றியதுமான ஒரு வரலாறே அது. எனவே நீதிக்காகவும் சமத்துவத்துக்காகவும் போராடும் பொருட்டு அணிதிரண்ட பெண்களின் வரலாற்றை நாம் நினைவுகூர்கின்ற ஒரு நாளென்றும் இதனைக் குறிப்பிடலாம்.

எனவே இதிலுள்ள வரலாற்று ரீதியிலான பகுதியையும், எப்படியிருப்பினும் இது எமக்கான தினம் என்ற சர்வதேச ரீதியான உணர்வையும் உண்மையில் நான் நேசிக்கின்றேன்.

இந்நிலை காலப்போக்கில் மாற்றமடைந்துள்ளதாக நீங்கள் கருதுகின்றீர்களா?

பெண்களுக்கான சர்வதேச ஆண்டாக அமைந்த 1975ஆம் ஆண்டோடு ஒப்பிட்டுப் பார்க்கின்றபோது, இன்று மார்ச் 08ஐப் பற்றி அறிந்துவைத்துள்ள, அதனைக் கொண்டாடுகின்ற பெண்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. அரசாங்கத்தின் அமைச்சுக்களாலும் ஐக்கிய நாடுகள் சபையினாலும் கொண்டாடப்படுகின்ற ஒரு ஜனரஞ்சக நிலையை இன்று மார்ச் 08 அடைந்துள்ளது. வெறுமனே பெண்கள் இயக்கங்களுக்கு முக்கியமானதொரு தினம் மட்டுமே என்ற நிலையையும் தாண்டி அது பூரணமாக ஜனரஞ்சகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே நேர்மறை எதிர்மறை அம்சங்கள் நிச்சயமாகக் காணப்படினும், கடந்த 30 அல்லது 40 ஆண்டுகளுக்கு முன்னரான நிலையுடன் ஒப்பிடுகையில் பாரியதொரு வேறுபாடு நிச்சயமாக உண்டு.

ஒரு பெண்ணிலைவாதியாக உங்கள் பயணத்தை ஆரம்பிப்பதற்கு உங்களுக்கு உந்துசக்தியாக அமைந்தது எது?

நீங்கள் ஒரு பெண்ணிலைவாதியாக இருக்கும்போது அதில் ஒரு பகுதி தனிப்பட்ட ரீதியானதாகவும் மற்றொரு பகுதி அரசியல் ரீதியானதாகவும் அமைந்திருப்பது உண்மையிலேயே ஒரு நல்ல விடயமாகும்.

காலனித்துவத்துக்குப் பின்னரான அதிருப்திகளும் பெண்களுக்கான இடைவெளிகளும் நிலவிய, இன்னும்கூட பெண்களுக்கான இடம் இல்லாதிருக்கின்ற நிலை காணப்படுகின்ற இலங்கை போன்றதொரு நாட்டில் ஓர் இளம் பெண்ணாக வளர்வதென்பது மேற்சொன்ன தனிப்பட்ட ரீதியான பகுதியாகும்.

ஒரு பெண்ணாக – பெண்பிள்ளையாக இருக்கின்ற படியினால் இதனைச் செய்யக்கூடாது, அதனைச் செய்யக்கூடாது என்ற உணர்வை என்னுள் ஒருபோதும் தோற்றுவிக்காத பெற்றோரைக் கொண்ட ஒரு குடும்பத்தில் இருந்துதான் நான் உருவாகி, பாலினவாதத்தையும் (Sexism) பாலியல் தொந்தரவுகளையும், சில தருணங்களில் பெண்ணினத்தின் மீதான வெறுப்பையும் (Misogyny) கண்டுகொண்ட ஓர் உலகைவிடுத்து வெளியே சென்றேன். உண்மையில், பெண்களுக்கு சமத்துவத்தைக் கோரி நிற்கின்ற இயக்கத்தின் ஓர் அங்கமாக
வர வேண்டுமென்ற ஒரு துணிச்சலான உள்ளுணர்வாகவே அது காணப்பட்டது.

மேற்சொன்ன அரசியல் ரீதியான பகுதி எனும்போது, அது நான் இளம் வயதாக இருக்கும் நிலையிலேயே உருவானது. நான் 1952ஆம் ஆண்டு பிறந்தவள். 1975ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையானது பெண்களுக்கான சர்வதேச ஆண்டாக அவ்வருடத்தைக் கொண்டாடியபோது நான் இருபது வயதைத் தாண்டியவளாக இருந்தேன். அத்தோடு உலகின் முதலாவது பெண் பிரதமரைக் கொண்ட நாடாகவும் இலங்கை திகழ்ந்தது. அந்நாட்களில் பெண்களுக்கான சர்வதேச ஆண்டு பற்றியும் மெக்சிகோ மாநாடு பற்றியும் சில பிரசாரங்களும் விளம்பரப்படுத்தல்களும் முன்னெடுக்கப்பட்டன. பெண்களின் உரிமைகள் பற்றியும் பெண்களுக்கான சமத்துவம் பற்றியும் கதைப்பது ஏதோவோர் அடிப்படையில் சட்டரீதியானதாகக் கொள்ளப்படுகின்ற நிலைமையையும், அரசாங்கங்களும் ஐக்கிய நாடுகள் சபையும் அது குறித்த சில விடயங்களை தீவிர அக்கறையுடன் உள்வாங்கிக் கொள்கின்ற ஒரு நிலையையும் கொண்ட அரசியல் மற்றும் சமூகச் சூழலொன்று அன்று நிலவியது.

1985ஆம் ஆண்டு நைரோபியில் நடைபெற்ற மாநாட்டுக்கு நான் சென்றிருந்தேன். என்னுடைய தனிப்பட்ட போக்கில் மட்டுமன்றி, முழு உலகிலுமுள்ள பல பெண்களின் போக்குகளிலும் பாரியதொரு நகர்வாக அது அமைந்தது.

நாம் இரண்டாவது அலையைத் தொடங்கிய போது எமக்கு நாமே ‘ஒன்றிணைந்த பெண்ணிலைவாதிகள் (Hyphenated Feminists) என பெயர் சூட்டிக்கொண்டோம். ஒன்றிணையாத பெண்நிலைவாதிகளுக்கான (Un-hyphenated Feminists) வரைவிலக்கணத்தை நோக்கி அப்போது முதல் ஒரு பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவை அனைத்தையும் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

1970 மற்றும் 1980 களில் எம்மைப் பற்றி நாம் பெண்ணிலைவாதிகள் என பேசத்தொடங்கிய போது, பெண்கள் மீதான அடக்குமுறைகளுக்கும் சுரண்டல்களுக்கும் பங்களிப்புச் செய்கின்ற ஒரு காரணி என்ற வகையில் ஆணாதிக்கத்தைப் புரிந்துகொள்ள வேண்டிய ஒரு கட்டத்தின் மீது எமது அரசியல் நிலைப்பாட்டுக்கமைய எம்மை நாமே அவ்விதம் வரையறுத்துக்கொள்ள வேண்டியிருந்தது. எனவே தாராண்மைவாத பெண்ணிலைவாதிகள் (liberal feminists), சோஷலிச பெண்ணிலைவாதிகள் (socialist feminists), மாக்சிச பெண்ணிலைவாதிகள் (Marxist feminists), தீவிர பெண்ணிலைவாதிகள் (radical feminists), அராஜக- பெண்ணிலைவாதிகள் (anarcho-feminists) மற்றும் சூழலியல் பெண்ணிலைவாதிகள் (eco-feminists) என்றெல்லாம் காணப்பட்டனர். நாம் எம்மை பெண்ணிலைவாதிகள் என்றே வரையறுத்துக் கொண்டதோடு உலகின் அரசியல் சார்ந்த புரிதல் ஒன்றுக்காக எம்மை ஒன்றிணைத்துக் கொண்டோம். எம்மை வெறுமனே பெண்கள் என்ற அடிப்படையில் மட்டுமன்றி குறித்ததொரு சமூக, அரசியல் பின்னணியில் ஜீவிக்கின்ற மனிதர்கள் என்ற அடிப்படையிலுமாக அது அமைந்தது.

இன்று ‘பெண்ணிலைவாதி’ என்ற ஒரு பொதுவான சொல்லை நீங்கள் பயன்படுத்துகின்ற போது, நீங்கள் அரசியலைத் தவறவிட்டதையே அது சுட்டிக்காட்டுவதாக நான் கருதுகின்றேன். பொருளியல் பற்றிய அரசியல் சார்ந்த புரிதல் ஒன்றையும், அரசியல் கட்டமைப்புக்களையும் சமூகக் கட்டமைப்புக்களையும் நீங்கள் தவறவிட்டுள்ளீர்கள். நீங்கள் வெறுமனே ‘பெண்ணிலைவாதிகள்’ எனச் சொல்லும் போது சில நேரங்களில் அது அளவுக்கு மீறிய எளிமையாக அமைந்துவிடுகின்றது. அதன் காரணமாகத்தான் சமகாலத்தில் அது அதிகமாக வெறுக்கப்படுகின்றது. எல்லோருமே ஒரு பெண்ணிலைவாதியாக இருக்க முடியும். ஹிலாரி கிளிண்டன் ஒரு பெண்ணிலைவாதி, கடாபி ஒரு பெண்ணிலைவாதி, நானும் ஒரு பெண்ணிலைவாதி, நீங்களும் ஒரு பெண்ணிலைவாதி. சரியான வேறுபாடுகளை நீங்கள் தொலைத்து விட்டுள்ளீர்கள்.பெண்கள் இயக்கம் பற்றிய

உங்களுடைய உற்சாகத்துக்கு காரணமாக எது அமைந்தது? “நாம்” என்ற சொல்லை நீங்கள் எந்த அர்த்தத்தில் பிரயோகிக்கின்றீர்கள்?

தனியாக நான் ஒரு போதும் பெண்ணிலைவாதி ஒருவராக இருக்க முடியாது என்பதனால் “நாம்” என்ற சொல் மிக முக்கியமானது. ஏனைய பெண்ணிலைவாதிகளுடன் இணைந்த ஒரு பெண்ணிலைவாதியாகவே எப்போதும் நான் இருந்து வருகின்றேன். இலங்கையில் நான் ஒன்றிணைந்து பணியாற்றியிருக்கின்ற பெண்களைத் தான் இங்கு “நாம்” என்பது குறிக்கின்றது. அத்துடன் 30 வருடங்களாக பெண்ணிலைவாத அரசியலில் நான் ஈடுபட்டிருந்த பெண்நிலைவாதிகளின் உலகளாவிய சமூகம் ஒன்றையும் இந்த “நாம்” என்பது குறிக்கின்றது. “நாம்” என்ற கூட்டிணைப்பில் வலிமையான ஓர் உணர்வை நான் கொண்டிருக்கின்றேன். எனவேதான் நான் ஒரு பெண்ணிலைவாதியாக இருப்பதற்கு அதிக ஆர்வம் எடுத்துக் கொண்டேன்.

எவ்வாறேனும் ஒன்றிணைவதற்கான வினோதமான சில காரணங்களின் பொருட்டும், ஒற்றுமை உணர்வொன்றைக் கொண்டிருப்பதும், ஒருவிடயத்தைப் பற்றி ஒரே விதமாக உணர்கின்றதுமான வலுவான பெண்கள் சமூகமொன்று உலகெங்கிலும் காணப்படுகின்றது. பகிர்ந்துகொள்ளப்பட்ட அடையாளங்களினதும் அரசியலினதும் ஒரு சேர்மானமாக “நாம்” என்ற வலுவான உணர்வு இன்னும் இருப்பதாகவே நான் கருதுகின்றேன்.

நைரோபியில் நான் மிக உற்சாகமடைந்த அந்த உணர்வை இப்பொழுது நினைத்துப் பார்க்கின்றேன். பெண்கள் இயக்கங்களுக்குரிய புது யுகப் பெண்களுக்கான அபிவிருத்தி மாற்றீடுகள் (Development Alternatives for Women in a New Era / DAWN) என்பதை அறிமுகப்படுத்தியமையால் நைரோபி ஓர் அற்புதமான அனுபவமாக அமைந்தது. பெண்கள், சட்டம் மற்றும் அபிவிருத்தி வலையமைப்புக்களின் அறிமுகமாக அது காணப்பட்டது. உலகெங்கிலும் இருந்து கலந்துகொண்ட பெண்களின் ஆக்ரோஷமிக்க பேரணி ஒன்றாகவும் அது அமைந்ததுடன், மிகையான உற்சாகமும் நட்புறவும் மேலோங்கியிருந்தது. எனவேதான் 1985 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை நான் செயற்பட்டுவருவதாகக் கருதுகின்றேன். கூட்டு அடையாளத்துக்கானதும் ஒற்றுமைக்கானதுமான உணர்வை அந்த உத்வேக உணர்வு வழங்கியது.

சமகாலப் பெண்கள் இயக்கங்கள் குறித்து நீங்கள் கவலையடைகின்ற ஏதேனும் விடயம் உண்டா?

1990களின் இறுதிப் பகுதியிலிருந்து பல கூறுகளாகப் பிரிந்துள்ளமையாலும் அதிகளவில் பிரத்தியேகமயப்படுத்தப்பட்டுள்ளமையாலும் (specialization) பெண்கள் இயக்கங்கள் குறித்துப் பேசுவதற்குக்கூட இன்று விரக்தியாக உள்ளது. இவ்விதம் பிரத்தியேகமயப்படுத்தப்பட்டுள்ளமை சிறந்த விடயமென்றாலும் தனியான ஒன்று அல்லது வேறுசில விடயப்பரப்புக்களை பிரத்தியேகமயப்படுத்தும் எமது முயற்சிகளினால் பரந்த விடயப்பரப்பின் மீதான எமது பார்வையை நாம் ஒருவகையில் இழந்துவிடுகின்றோம். எனவே, ஆட்கடத்தல் வியாபாரத்துக்கும் புலம்பெயர்வுக்கும் இடையிலான தொடர்பை நோக்காது, புலம்பெயர்வு சார்ந்த பிரச்சினைகள் குறித்து பணியாற்றுகின்ற மிகத்திறமையான இளம் பெண்களை நான் இன்று சந்திக்கின்றேன். அதேபோல், உணவு மற்றும் வறுமை சார்ந்த பிரச்சினைகள் குறித்துப் பணியாற்றுகின்ற மிகத்திறமையான பெண்களை இன்று நான் காண்கின்றேன். ஆனால், ஏனைய சுற்றுச்சூழல் உரிமைகள் சார்ந்த பிரச்சினைகள் குறித்துத் தொழிற்படுகின்ற குழுக்களுடன் அவர்கள் ஏதோ ஒருவகையில் தொடர்பற்று இருக்கின்றனர். அதாவது இவ்வாறான தொடர்பின்மைகள்தான் இன்று நிலவுகின்றன.

ஆர்வத்துடன்கூடிய, புத்தாக்கம் மிகுந்த, அற்புதமான பல பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இருந்தாலும் அவை பல பிரிவுகளாகவும், பகுதிகளாகவும், கூறுகளாகவும் அமைந்துள்ளன. இந்த அனைத்துத் திறமைகளையும், உத்வேகத்தையும், புத்தாக்கத்தையும் பரந்துபட்ட ஒரு விடயத்தின் மீதான புரிதல் ஒன்றை உருவாக்கும் பொருட்டு எவ்வாறு கொண்டுவர முடியும் என நோக்குவதுதான் இப்போது எனக்குள்ள மிகப்பெரும் சவாலாகும். இவையனைத்தையும் விட, விரிவான சட்டகங்களினுள் அமைந்த அரசியல் சார்ந்த புரிதல் ஒன்று எமக்குத் தேவையாக உள்ளது.

ஐ.நா. மீதான எமது தாக்கம் எத்தகையது? அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

பெண்கள் இயக்கங்களில் அது உண்மையிலேயே ஒரு பாரிய தாக்கத்தைக் கொண்டிருந்தது. நான் மனித உரிமைகள் பாதுகாவலராக உள்ளமையால், 1993 இல் பெண்கள் உரிமைகள் குறித்த உலக மாநாடு மற்றும் பெண்கள் உரிமைகள் மனித உரிமைகளாகும் என்று கோருவதற்கான உலகளாவிய பிரசாரம் என்பன எனக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைந்ததாக நான் கருதுகின்றேன். அதிலிருந்து ஐ.நா. மாநாட்டுக்கான ஒரு செயன்முறை காணப்பட்டது.

பெண்கள் உரிமைகளை உள்ளடக்க முடியுமான கொள்கை மற்றும் மொழி உருவாக்கத்தில் வினைத்திறனுடன் பங்கேற்பதற்கும், ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்புரிமை பெற்றுள்ள சகல அரசுகளாலும் அங்கீகரிக்கப்படக்கூடிய ஒருமித்த ஆவணங்களிலுள்ள பெண்கள் உரிமைகளுக்கு உறுதியளிப்பதற்கும் அதன் மீதான கடப்பாடுகளைக் கொண்டிருப்பதற்கும் அக்காலப்பகுதியில் பெண்கள் இயக்கங்களைச் சேர்ந்த பெண்களுக்கும் பெண்ணிலைவாதிகளுக்கும் பல வாய்ப்புக்கள் காணப்பட்டன.

பெண்களின் நிலைப்பாடுகள் குறித்த ஆணைக்குழுக்களைச் சுற்றித் தொங்கிக்கொண்டிருக்கின்ற அல்லது ஒவ்வொரு வருடமும் ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் பேரவைக்குச் சென்றுவருகின்ற ஒருவராக இருக்க நாம் விரும்பவில்லை. பெண்களுக்கு நன்மை பயக்கக்கூடிய கொள்கை மற்றும் சட்டங்களை வடிவமைப்பதற்கு பயன்படக்கூடிய ஆவணங்களில் வலுவான மொழி ஒன்றை பெற்றுக்கொள்வதே எமது இலக்காக இருந்தது.
ஆனாலும் யதார்த்தமற்ற சில வழிமுறைகளில் இதனை உலகளாவிய மட்டத்தில் செயற்படுத்துகின்ற பெண்களின் தலைமுறை ஒன்றும் இருப்பதாக பெரும்பாலும் நான் கருதுகின்றேன். நியூயோர்க் மற்றும் ஜெனீவா ஆகிய இடங்களுக்கு நீங்கள் சென்று அங்குள்ள விடயங்களுடன் உங்களது சொந்த நாட்டில் அல்லது ஐ.நா.வில் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்ற வேறேதேனும் நாடுகளில் பெண்களுக்கு மறைவில் என்ன நடந்துகொண்டிருக்கின்றது என்பதை ஒப்பிட்டுப் பார்க்கையில் முடியுமான காரியம் ஒன்றுமில்லை.

அதிகமான பெண்கள் ஐ.நா. செயன்முறைகளுடன் மிகவும் விரக்தியடைந்து காணப்படுவதாக நான் எண்ணுகின்றேன். ஐ.நா. முறைமைக்குள் மகளிர் விவகாரங்களுக்கு சம அந்தஸ்த்தைப் பெற்றுக்கொடுக்கக் கூடிய ஓர் அமைப்பாக ஐ.நா. பெண்கள் (UN Women) தொழிற்படுமென பெண்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்த போதிலும் அவ்வமைப்பு அதனைச் செய்திருக்கவில்லை. பூகோள அரசியல் மற்றும் பொருளாதார முறைகளில் உள்ள முன்னேற்றத்தையும் மிகக் குறைவானளவு முன்னுரிமை அளிக்கத்தகு பெண்கள் உரிமைகளையும் அது தன்னளவில் சுட்டிக்காட்டுவதாக நான் கருதுகின்றேன். சில நேரங்களில் அந்த யதார்த்தத்திற்கு நாம் முகங்கொடுக்க வேண்டியதில்லை. எனவே, நாம் தொடர்ந்தேச்சையாகச் சென்று அந்த முறைகளைத் தொழிற்படுத்த வேண்டும்.

எதிர்காலத்தில் நாம் எத்தகைய போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்?
திறமையான இளம் பெண்ணிலைவாதிகளும் அனுபவம் வாய்ந்த பல பெண்ணிலைவாதிகளும் குறிப்பிட்ட விடயங்களில் மெச்சத்தக்க பல பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆணாதிக்கம் மற்றும் பெண்ணினத்தின் மீதான வெறுப்பு ஆகியவை பற்றிய ஒரு புரிதலை மீள்வரையறை செய்தலும், மீள்விருத்தி செய்தலும், மீள் கற்பனை செய்தலுமே சவால் மிக்கதாகும். பெண்களுக்கெதிரான வன்முறைகளைப் பற்றியதான பணிகளைப் பார்க்கின்றபோது, உதாரணமாக ஒவ்வொருவரும் அவ்வாறான பணிகளை மேற்கொள்கின்றனர் என்பது சரிதானே? ஐக்கிய நாடுகள், அரசாங்கங்கள், ஐரோப்பிய ஒன்றியம், பலதரப்பட்ட சகல ஐ.நா. மற்றும் உலகளாவிய முகவரமைப்புக்கள், நன்கொடையாளர்கள், மகளிர் குழுக்கள் மற்றும் எமது நாடுகளிலுள்ள சிறிய கிராமங்களைச் சேர்ந்த சமூக மட்டக் குழுக்கள் என யாவும் தமது பணிசார்ந்த கலந்துரையாடல்களை மேற்கொள்கின்றன. எனினும் அக்கலந்துரையாடல்களில் ஆணாதிக்கம் மற்றும் பெண்ணினத்தின் மீதான வெறுப்பு குறித்த கருத்தாடல்கள் அடிக்கடி இடம்பெறுவதில்லை.
அரசின் தன்மை பற்றியும் பொலிஸ் மற்றும் நீதி முறைமை போன்ற அரச நிறுவனங்களின் தன்மை பற்றியும் நாம் போதுமானளவு பேசுவதில்லை. பெண்ணினத்தின் மீதான வெறுப்பானது ஏன் உலகில் நிலைகொண்டுள்ளது என்பதைப் பற்றியும் நாம் போதியளவு கதைப்பதில்லை. பெண்களுக்கு மிகவும் மிலேச்சத்தனமான செயல்களைச் செய்துவிட்டு அதற்கான நியாயம் கற்பிக்கும் பொருட்டு கலாசாரம், மதம் மற்றும் வழக்காற்று நடைமுறைகள்

போன்ற வாதங்களைக் கூறி அதிலிருந்து மக்கள் தம்மை ஏன் விடுவித்துக் கொள்கின்றனர்? அதனைப் பற்றிப் பேச என்ன காரணத்துக்காக நாம் பயப்படுகின்றோம்?

பல்வேறுபட்ட மக்களும் பல்வேறுபட்ட மட்டங்களில் மேற்கொண்டு வருகின்ற பணிகளுக்கு இடையில் காணப்படுகின்ற இடைவெளியை ஒன்றிணைப்பதற்கான சவால் எப்படியோ எமக்குள்ளது. பெண்களின் முன்னேற்றம், பெண்களுக்கெதிரான வன்முறையை இல்லாதொழித்தல், பெண்கள் உரிமைகள் மற்றும் சமத்துவம் என்பன பற்றியதாக அது இருக்க வேண்டும். ஆனால் அது ஒருபோதும் அடிப்படைக் காரணங்களை இனங்கண்டு அடையாளப்படுத்தவில்லை. எனவே, ஆணாதிக்கம் மற்றும் பெண்ணினத்தின் மீதான வெறுப்பு என்பன உட்பொதிந்துள்ள மூல காரணங்களுக்குள் மீளச் சென்று பார்ப்பதற்கு உண்மையிலேயே நான் விரும்புகின்றேன்.

விரைவில் அல்லது தாமதமாக அங்கு செல்வேன் என நான் நினைக்கின்றேன். வரலாற்று ரீதியாக இந்த விடயங்கள் சுழற்சி முறையில் செல்கின்றன. எனவே இவ்விடயங்களை ஒன்றுதிரட்டும் நிலைக்குக் கொண்டுவருவதற்கான பெண்ணிலைவாதத்தின் ஐந்தாவது அலையொன்றை நாம் கொண்டிருப்போம்.

இதே பாதையில் பயணிக்கவுள்ள திடமான இதயம் கொண்டவர்களுக்கு எவ்வாறான அறிவுரைகளை நீங்கள் கூறுவீர்கள்?

பெண்ணிலைவாதியாக இருப்பது ஒரு மேன்மையான செயல். பலருக்கு தான் ஒரு பெண்ணிலைவாதி எனக் கூறிக்கொள்வதற்குப் பயம். நீங்கள் திடமானவராகக் காணப்பட வேண்டும் என்பதோடு அது ஒரு மகிழ்ச்சி தரக்கூடிய அம்சமுமாகும். நீங்கள் அன்பு செலுத்தப்படுவீர்கள். உலகில் காணப்படும் அனைத்து பெண்களிடமும் ஆழமான சிறந்த ஒரு நட்புறவை நிலைநாட்டலாம். சில பெண்ணிலைவாதிகளுடனான எனது நட்பு 30-35 ஆண்டுகளாகத் தொடர்வதோடு அவர்களுடன் ஒன்றிணைந்து பயணித்துள்ளேன். கூட்டிணைந்து செயல்படும் போது ஏற்படும் உற்சாகமே இதன் மிக முக்கியமான அம்சமாகும்.

எவ்வாறான நம்பிக்கைகளும் முக்கிய பெறுமானங்களும் ஆண்டாண்டு காலமாக உங்களை நீடித்து நிலைக்கச் செய்துள்ளன?

என்னைப் பொறுத்தவரையில் இந்த உலகம் இரண்டு வகையான மக்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு குழு தீமை மற்றும் பாதகமான விளைவுகளின் நம்பிக்கையாகவும், மற்றொன்று கருணை நிறைந்த, இரக்கமுள்ள மனித குலமாகவும் காணப்படுகின்றது. மற்றவர்கள் தீய வழியில் நடப்பவர்களாக இருப்பினும் நான் கருணை நிறைந்த, இரக்கமுள்ள பாதையிலேயே நம்பிக்கை கொண்டுள்ளேன்.

மற்றுமொரு பெறுமானமாகக் காணப்படுவது நட்பின் மீதான நம்பிக்கை ஆகும். மற்றவர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் எனவும் நம்பிக்கையின்மையைக் கைவிட வேண்டும் எனவும் எனது நண்பர்கள் என்னை ஆதரித்தனர். நான் தற்போது ஒரு முதிர்மை அடைந்த பெண் என்பதால் இதைப் பற்றி பேசலாம். அறுபது வருடங்கள் சென்றுள்ளதோடு, மக்களை வெறுப்பதில் காலத்தை வீணாக்காமல் இருந்ததும், மற்றவர்கள் ஏன் தீங்கு விளைவிக்கின்றனர் என்பது பற்றி சிந்தித்து காலத்தை வீணடிக்காமல் இருந்ததுமே என்னை இவ்வளவு நீண்ட தூரம் கொண்டு வந்த திடமான காரணிகளாகும். எப்போதும் ஒரு நன்மையான விடயத்தினை கண்டறிய முயற்சி செய்கிறேன்.

எனது குழந்தைகள் என்னைப் பார்த்துச் சிரிக்கின்றனர். என்னைப் பற்றியதான அவர்களின் குழந்தைப்பருவ ஞாபகங்கள் அதிகாலை 2 மணிக்கு அவர்களைக் கட்டிலில் இருந்து இழுத்துவந்து “எழும்புங்கள்! வயல்களிலுள்ள நிலவை வந்து பாருங்கள்” என்று சொல்கின்றன. உங்களுக்குத் தெரியும்தானே? இவை சின்னச் சின்ன விடயங்கள்தான். மின்மினிப் பூச்சிகளும், இரவு நேர நிலவும், மரங்களின் கொஞ்சம் பசுமையும் இளவேனிற்காலத்தின் போதானவைதான். நான் இந்த உலகத்தில் அதிகளவிலான மகிழ்ச்சியைக் கண்டுகொண்டேன்.