Thinakkural: ‘வீட்டு வன்முறைகள் குறைந்துவிடவில்லை’

Source: Thinakkural

பிரியதர்ஷினி சிவராஜா

பெண்களுக்கு எதிரான வீட்டு வன்முறைகளும் பாலியல் வன்முறைகளும் குறைந்து விட்டன என்று கூற முடியாத நிலையில் பெண் உடலால் தான் பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்ற பொதுவான மனப்பான்மையானது பெண்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகி வருவதாக பெண்ணுரிமை செயற்பாட்டாளரும் ஓவியையுமான கமலா வாசுகி தெரிவித்தார். பெண்கள் மீது ஆடைக் கட்டுப்பாடுகள் உட்பட பல கட்டுப்பாடுகளை விதித்து அவர்களைக் கட்டுப்படுத்துவதனூடாக பிரச்சினைகளைத் தீர்க்கவே முயற்சிக்கப்படுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இம்முறை ‘அவள்’ குரலாக கமலா வாசுகியின் நேர்காணல் பதிவாகின்றது.

கேள்வி:ஒடுக்கப்பட்ட சமூகங்களின் விடுதலையில் கலை வடிவங்களின் பங்கு குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்:ஒடுக்கப்பட்ட ஓரங்கட்டப்பட்ட அனைத்து மக்களின் குரலாக ஒலிப்பதில் கலைகளின் பங்கு அளப்பரியதாகும். ஆனால் உன்னதக் கலைகள் என்ற ரீதியில் சில கலைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கப்படும் நிலையில் தமிழர்களின் பாரம்பரியம் மிக்க பண்டைய கால கலை வடிவங்கள் இன்று புறக்கணிப்புக்குள்ளாகின்றன. குறிப்பாக பறை, கூத்து, சடங்கு என்பனவற்றைக் குறிப்பிடலாம். இந்த வகையில் வடக்கு கிழக்கில் போரில் பாதிக்கப்பட்ட பெண்களுடன் வேலை செய்யும் போது குறிப்பாக நீண்ட கால யுத்தத்தின் பாதிப்பு கொண்டவர்கள் மற்றும் பாலியல் ரீதியில் ஒடுக்கப்பட்டவர்களின் துயர்களையும், மகிழ்வுகளைப் பகிரும் வடிவங்களாகவே கலைகள் உள்ளன. கலை வடிவங்களை சமூக மாற்றத்திற்காக பயன்படுத்தி அதனை ஓர் போராட்ட வடிவமாக முன்னெடுக்க வேண்டும். ஆக்கப்பூர்வமான வன்முறையற்ற மனித வாழ்க்கைக்காக கட்புல மற்றும் அரங்க ஆற்றுகைளினூடாகப் போராடுவதும் ஒரு போராட்டம் தான்.

கேள்வி:இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தினை ஏற்படுத்த பெண்களினூடாக கலை வடிவங்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று கருதுகின்றீர்கள்?

பதில்: கலை வடிங்களினூடாக எமது உணர்வுகளைப் பேச முடியும். அந்தவகையில் மட்டக்களப்பில் நாம் மேற்கொண்ட ‘நீதிக்கான பறை’ என்ற ஆற்றுகையைக் குறிப்பிட முடியும். அதேபோன்று கூட்டுக் கலையாக்கங்களான நாடகங்கள், பாடல்கள், ஓவியங்களினூடாக இந்த பணியினை மேற்கொள்ள முடியும். போர்க்கால அனுபவங்கள் என்பது எல்லா சமூகத்திற்கும் பொருந்துகின்றது. அந்த அனுபவங்களைப் பதிவு செய்தல் என்பது கலையாக்கங்களினூடாகவே சாத்தியப்படுகின்றது. மேலும் பெண் குரல்கள், ஒடுக்கப்பட்டவர்களின் குரல்களை ஆவணப்படுத்தல், வெளிப்படுத்தல் எல்லாம் கலை மற்றும் அரங்க செயற்பாடுகளில் சாத்தியமானதாகும். இது மொழியைத் தாண்டிய ஓர் அனுபவமாகவும் இருக்கின்றது. பொதுவாக எல்லா சமூகமும் கலை உணர்வுகளின் மீது ஆர்வம் கொண்டுள்ளன. கலை மக்களுக்கானது என்பதனை மக்களும் ஏற்றுக் கொள்ளல் வேண்டும். நீதி கிடைக்காமல் இருத்தலை கலைகளின் மூலம் அடையாளப்படுத்த முடியும். இனங்களை இணைப்பதற்கு கலைகளைப் பயன்படுத்த முடியும்;.

கேள்வி:உங்கள் பங்களிப்புடனான ‘வன்முறையற்ற வாழ்வுக்கான ஓவியர்கள்’, ‘மூன்றாவது கண் செயற்பாட்டுக்குழு, ‘சமதை பெண்ணிலைவாதக் குழு’ போன்ற அமைப்புகளின் மூலம் நீங்கள் சமூகத்தில் எவ்வாறான மாற்றத்தை எதிர்பார்க்கின்றீர்கள்?

பதில்:இவை எல்லாம் சிறு கலந்துரையாடல் சார்ந்த குழுக்களாகும். அதிகாரத்துவ மையங்களை பகுத்தறிவுடன் கேள்விக்குட்படுத்தி பகுத்தாராயும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டவையாகும். இனத்துவம், இயற்கைச் சூழல், உணவு, மருந்துகள் போன்ற அனைத்து அம்சங்களிலும் காணப்படும் பகுத்தாராயாத தன்மைகள் இங்கு ஆராயப்படுகின்றன. தனிநபர் சுரண்டல்கள், எங்களுடைய வாழ்வைக் கட்டுப்படுத்தும் காரணிகள் என்பனவற்றை கலந்துரையாடி தொகுத்து ஆய்வு செய்து இங்கு பார்க்கப்படுகின்றது.

இனத்துவ ரீதியில் பார்த்தால் விஜயன், எல்லாளன் ஆகிய ஆண் ராஜாக்கள் பற்றிய கதைகளைப் பற்றியே பேசப்படுகின்றது. ஆனால் எங்களுடன் வாழ்ந்த பெண்கள் கதைகளுக்கு என்னவாயிற்று? குவேனி, மண்டோதரி, உலக நாச்சியார், குருவி நாச்சியார், கண்ணகி இவர்களின் கதைகள் எங்கே? எமது தாய்வழி தோற்றத்தின் கதைகள் எங்கே? இவ்வாறான மாற்று சிந்தனைகளுக்கு இடமளித்து இந்த குழுவில் ஆராயப்படுகின்றது.

அதேபோன்று உணவு, சூழல் சார்ந்த விடயங்கள், வதந்திகளாக வரும் பிரச்சினைகள் இங்கு ஆராயப்படுகின்றன. உதாரணமாக கிறீஸ் பூதம், சாப்பாடுகளில் மருந்துகள் கலத்தல் என்பனவும் இதில் அடங்கும். இவ்வாறான விடயங்களை காட்டூன்களினூடாகவும், கட்டுரைகளினூடாகவும், ஓவியங்களாகவும் வெளிப்படுத்தப்பட்டு சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிக்கப்படுகின்றது.

எங்களது நோக்கம் சிந்தனை மாற்றம் தான். தெற்காசியாவில் இலங்கை சிறந்த கல்வி அறிவைக் கொண்ட நாடாகக் கருதப்படுகின்றது. ஆனால் பகுத்தறிவு கொண்ட சமுதாயத்தினை இந்த கல்வி முறை உருவாக்கவில்லை. விஞ்ஞான பாடத்தினைக் கற்றுக்கொள்ளும் நாம் சாப்பாட்டில் கருத்தடை மாத்திரைகளை கலக்க முடியுமா என்று பகுத்தாராய தெரியாமல் இருக்கின்றோம். கணிதப் பாடத்தினை கற்கும் நாம் எதனையும் தர்க்க ரீதியாக சிந்திக்க தவறிவிடுகின்றோம். இது மதம், ஆன்மீகம், வர்த்தகம் ஆகிய அத்தனைக்கும் பொருந்தும். சிங்கள ஸ்ரீ எழுத்து வேண்டாம் என்று போராடிய நாம் சமஸ்கிருதத்தில் ஸ்ரீ எழுத்தினை அனுமதிக்கின்றோம். இது மதம், ஆன்மீகம், வர்த்தகம் ஆகிய அத்தனைக்கும் பொருந்தும்.

கேள்வி:கிழக்கிலங்கையில் இன்றைய நிலையில் பெண்கள் எத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்கின்றார்கள்?

பதில்:பொதுவாக பெண்கள் எதிர்கொள்கின்ற வன்முறைகளில் வீட்டு வன்முறைகளும், பாலியல் வன்முறைகளும் குறிப்பிடத்தக்கன. பெண்ணிய செயற்பாட்டாளர்களும், பெண்ணிய அமைப்புகளும் கடந்த 30, 40 வருடங்களாக இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண போராடி வருகின்றனர். ஆனால் இன்று இந்த பிரச்சினைகள் குறைந்து விட்டன என்று சொல்லவும் முடியாது. ஏனெனில் அவை வெவ்வேறு வடிவங்களை எடுத்திருக்கின்றன. தென்னிந்திய சினிமா, தொலைக்காட்சி நாடகங்கள், சினிமாப் பாடல்கள் ஆகியன பெண்களை வன்முறைக்குட்படுத்தல் என்ற விடயத்தினை நியாயப்படுத்தும் கருத்துக்களை ஆண்களிடமும், பெண்களிடமும் விதைத்து விட்டன.

தமிழ் முஸ்லிம் வேறுபாடு இன்றி இந்த விடயம் அவர்கள் மனதில் நன்கு பதிந்துவிட்டன. இருக்கின்ற நஞ்சை விட இப்பொழுது மேலதிகமாகவும் நச்சு விதைகள் விதைக்கப்படுகின்றன. எங்களது அன்னையர், அன்னையரின் அன்னையர் காலத்தில் இல்லாத சட்டத்திட்டங்கள் இப்பொழுது பெண்களுக்கு விதிக்கப்படுகின்றன. 80களில் உடை சார்ந்த பிரச்சினைகள் இருக்கவில்லை.

யாழ், மட்டக்களப்பு பகுதிகளில் சட்டைகள், மினி பாவடைகள் என்று பெண்கள் அணிந்தனர். அப்பொழுது பெண் ஆடைகள் விமர்சிக்கப்படவில்லை. ஆனால் இன்று பெண் உடல் தான் பிரச்சினை என்ற மனப்பான்மை காணப்படுகின்றது. பெண்களின் உடலில் பிரச்சினைகளை தேடுவது அச்சுறுத்தலான நிலைமையாகும். இதனால் பெண்களின் முன்னேற்றம், பெண்களின் சமத்துவம், கல்வி என்பன பின்னடைவு அடைகின்றன. பெண்களைக் கட்டுப்படுத்துவதனூடாக பிரச்சினையைத் தீர்க்க முயலுகின்றனர். இதனால் தான் பெண்களுக்கு எதிராக புது கட்டுப்பாடுகளும், மிரட்டல்களும், ஆடைக்கட்டுப்பாடுகளும் அதிகரித்து செல்கின்றன. பிரச்சினைகளுக்கான உண்மையான காரணங்களைக் கட்டவிழ்க்காமை பெண்களுக்கு எதிரான பாரிய அச்சுறுத்தலாகவே மாறி வருகின்றது.

கேள்வி:வடக்கு கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வலுவூட்டல் செயற்பாடுகளில் நீங்கள் காணும் குறைபாடுகள் என்ன?

பதில்:நல்லிணக்கம் என்பது இனங்களுக்கிடையே புரிந்துணர்வை ஏற்படுத்துவது மட்டுமன்றி பாதிப்புக்களிலிருந்து மீண்டெழுந்து வல்லமை மிக்க சமுதாயம் ஒன்றினைக் கட்டியெழுப்புவதுமாகும். அவ்வாறான சமுதாயத்தினைக் கட்டியெழுப்ப நீண்ட கால நோக்கின்றி மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் பயனற்றவையாகும். அரசியல் ரீதியில் நல்லிணக்கம் சார்ந்த பின்னடைவுகள் உள்ளபோதிலும் உருவாக்கப்பட்டுள்ள திட்டங்களை அடைவதிலும் பல பிரச்சினைகள் உள்ளன. வடக்கு கிழக்கில் அரசாங்க மட்ட உத்தியோகத்தர்களும், அதிகாரிகளும் போர்ச்சூலை அறிந்தவர்களாக இருந்த போதிலும் அவர்களால் காத்திரமான பங்களிப்பினை செய்து சமூகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியாத நிலையே காணப்படுகின்றது. இதனால் போருக்கு பிந்திய கடந்த பத்தாண்டுகளில் பாரியதொரு மாற்றத்தை இப்பகுதிகளில் காண முடியாதுள்ளது. இதனால் மக்கள் மேலும்மேலும் தங்கி வாழ்பவர்களாகவும் கடனாளிகளாகவும், பாரம் சுமப்பவர்களாகவும் மாறியுள்ளனர். மக்களைக் குறிப்பாகப் பெண்களை உரிமையுள்ளவர்களாகத் தன்மானமுள்ளவர்களாக நடத்துவதிலிருந்தே தனிநபர் சமூக வல்லமைப்படல் ஆரம்பிக்கிறது. அவ்வாறான அணுகுமுறையில்லாவிடில் எத்தனை கோடி பணம் ஒதுக்கினாலும், எத்தனை ஆயிரம் அலுவலகர்களை நியமித்தாலும் மக்கள் மேலும் மேலும் வல்லமையிழப்பதைத் தவிர்க்க முடியாது. மக்களுக்கான சேவை பூரணமானதாக இருந்தால் மட்டுமே அது பயன் தரும்.

Share the Post:

Related Posts