மே 2022
காலி முகத்திடலில் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வந்த ‘கோட்டாகோகம’ ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டக் களம் ஆகியவற்றுக்கு எதிராக 2022 மே மாதம் 09 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது.
பாரதூரமான முறையில் பொருளாதாரத்தை தவறாக முகாமைத்துவம் செய்தமை, பரவலான ஊழல் மற்றும் பொருளாதார நெருக்கடியை கடுமையாக அசட்டை செய்தமை ஆகிய செயற்பாடுகளானவை, அதிகரித்துவரும் பணவீக்கம், நாணய மதிப்பிழப்பு மற்றும் விலை அதிகரிப்பு ஆகியவற்றுக்கு மத்தியில், அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் எரிபொருள் என்பவற்றுக்கு அன்றாடம் நிலவும் பற்றாக்குறையையும் தினசரி அமுல்படுத்தப்பட்டுவரும் மின்வெட்டையும் பிரதிபலிக்கச் செய்தன. அதன் விளைவாக ஏற்பட்ட நெருக்கடிகளுக்கு எதிராகப் போராடுவதற்கென இந்த ஆர்ப்பாட்ட மற்றும் போராட்டக் களமானது நாட்டின் குடிமக்களால் ஏப்ரல் 09 ஆம் திகதி நிறுவப்பட்டு அத்திகதியிலிருந்து அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டும் வந்தது.
பொருளாதாரத்திலும் அரசியலிலும் முன்னெடுக்கப்பட்ட தவறான முகாமைத்துவத்தால் உருவான மனக்கசப்பு மற்றும் விரக்தி நிலை என்பன, பொறுப்புக்கூறலுக்காக ஜனாதிபதியும் அரசாங்கமும் பதவி விலக வேண்டுமென்ற கோரிக்கைக்கு இட்டுச்சென்றன. எவ்வாறாயினும், காலி முகத்திடலில் அமைந்திருந்த போராட்டக் களம் 09 ஆம் திகதி காலை பிரதமரின் தூண்டுதலின் பேரிலும் அரச பாதுகாப்புடனும் அரச செலவில் பேரூந்துகளில் வந்த ஆயிரக்கணக்கானோரை உள்ளடக்கிய கும்பலினால் அழித்தொழிக்கப்பட்டு அங்குள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கப்பட்டமையால், அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கும், கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் அத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்குமான உரிமை முற்றாக மீறப்பட்டது. பல ஆர்ப்பாட்டக்காரர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்பதுடன் ஆர்ப்பாட்டக் களத்தில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களும் அழித்தொழிக்கப்பட்டன. அதே சமயத்தில், அலரி மாளிகைக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டக் களத்தில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தவர்கள் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
நயவஞ்சகத்தனமான இத்தாக்குதல்கள் மாதக்கணக்கில் நீடித்த விரக்திகளுக்கு மேலதிகமாக அச்ச உணர்வையும் ஏற்படுத்தின. அத்துடன் அவை, ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும், பழிவாங்கும் எண்ணத்துடனான தாக்குதல்களையும் சட்ட ஒழுங்கு மீதான சீர்குலைவையும் தூண்டி இருந்தன. ஆத்திரமுற்ற குடிமக்கள் சுதந்திரமான முறையில் ஒன்றுகூடுவதற்கும் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் தமக்குள்ள உரிமையைப் பாதுகாப்பதற்காக மீண்டும் போராடியமையால், நடைமுறையிலுள்ள அவசரகால நிலையானது கோப உணர்வைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, மென்மேலும் தீவிர நிலையை அடைந்தது. காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக் களம் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டு, போராட்ட உணர்வும் எதிர்ப்புணர்வும் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதனால் நாம் அவர்களின் மீண்டெழும் ஆற்றலை வரவேற்கின்றோம். எவ்வாறாயினும், அரச ஆதரவுடனான வன்முறைகளுக்கு இடமளித்தமையானது, துரதி~;டவசமாக, கோப உணர்வுசார் மனோநிலைக்கு வழிவகுத்து, அது நாட்டின் மேலும் பல இடங்களில் வன்முறைச் செயல்களையும் தீவைப்புச் சம்பவங்களையும் துரிதப்படுத்தி இருந்தது.
சட்ட ஒழுங்குக்கு சீர்குலைவை ஏற்படுத்தித் தோற்றுவிக்கப்பட்ட இந்த மேலதிக நெருக்கடி குறித்து நாம் மிகுந்த கவலையடைகின்றோம். அது பொருளாதார நெருக்கடிகளை மட்டுமே அதிகரிக்கக் கூடியதாகும். வன்முறை தொடர்பில் உடனடியானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணைகள் நடாத்தப்பட்டு, வன்முறையில் ஈடுபட்டவர்களும் அவ்வன்முறையை ஒழுங்கமைக்க உதவியவர்களும் விரைவாகக் கைது செய்யப்பட வேண்டுமென்று நாம் கேட்டுக்கொள்கின்றோம். மேலும், பழிவாங்கும் எண்ணத்துடனான வன்முறைகளைக் கைவிட்டு அமைதியை நிலைநாட்டுமாறு நாம் அனைத்துக் குடிமக்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.
வன்முறைகளைத் தணிப்பதற்கு உதவுமாறு தார்மீக அதிகாரத்திலுள்ளவர்களிடம் நாம் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுக்கின்றோம். மேலும், அரசாங்கம் இல்லாத நிலையிலும் பிரதமர் பதவி விலகியுள்ள நிலையிலும், அரசியல் ஸ்திரத்தன்மையை மீண்டும் நிலைநிறுத்தி பொருளாதார மீட்சிக்கு வழிவகுக்கும் வகையில் செயற்படுத்தக்கூடிய யதார்த்தமான திட்டமொன்றுடன் இலங்கையின் தற்போதைய நெருக்கடிகளுக்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதற்கு பாராளுமன்றம் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும் நாம் கேட்டுக்கொள்கின்றோம்.
மிகவும் கொந்தளிப்பான இக்காலகட்டத்தில் அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி எடுத்த முடிவு குறித்தும் நாம் கவலையடைகின்றோம். விதிக்கப்பட்டுள்ள அவசரகால ஒழுங்குவிதிகள், மனித உரிமைகளைப் பாரியளவில் மீறுவதற்கு வழிவகுக்கும் எதேச்சாதிகாரமான கைதுகளை மேற்கொள்வதற்கு அரசாங்கத்துக்கு அனுமதி அளிக்கின்றன.
அமைதியான போராட்டங்களில் ஈடுபடுவதற்கும், அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கும் எமக்குள்ள உரிமைகளை நாம் மீள வலியுறுத்துவதுடன், அவ்வுரிமைகள் மதிக்கப்படவும் பாதுகாக்கப்படவும் வேண்டுமெனவும் கோருகின்றோம். மேலும், நிகழ்ந்தேறிய மிருகத்தனமான தாக்குதல்களுக்கான விசாரணைகள் உரியவாறு முன்னெடுக்கப்பட வேண்டுமென்றும், அவற்றுக்கான பொறுப்புக்கூறல் நிலைநாட்டப்பட வேண்டுமென்றும் கோருவதுடன், இன்று நாடு எதிர்நோக்குகியுள்ள உடனடி இன்னல்களுக்குத் தீர்வு காணும் வகையில் பாராளுமன்றத்தைத் திரும்பவும் உடனடியாகக் கூட்டுதல் மற்றும் அரசாங்கத்தை மீள் கட்டமைத்தல் ஆகியனவுட்பட, நிலவுகின்ற நெருக்கடிக்கு யதார்த்தமானதும் செயற்படுத்தக்கூடியதுமான தீர்வொன்று அடையப்பட வேண்டுமென்றும் நாம் கோருகின்றோம். நாம் ஒன்றிணைந்து இந்த சவால்களை வெற்றிகொள்வதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதால், மக்கள் மத்தியில் தொடர்ச்சியான ஒருமைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்றும் நாம் கேட்டுக்கொள்கின்றோம்.