20th April, 2020
நாம், அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை அதிகரிப்பதற்கான பணிகளில் இரு தசாப்தங்களுக்கும் மேலாக ஈடுபட்டிருக்கும், நாட்டின் வெவ்வேறு மாவட்டங்களிலும் இயங்கும் ஆறு பெண்கள் அமைப்புக்கள் அடங்கிய குழுவாவோம்.
மே மாத இறுதியில் பாராளுமன்றத் தேர்தல்களை நடத்தப் பணிக்கவுள்ளதாக பல்வேறு ஊடகங்களிலும் வெளியாகும் அறிக்கைகளையும் ஊகங்களையும் நாம் மிகுந்த கவலையுடன் கவனிக்கின்றோம். அந்த ஊகத்தை உறுதிப்படுத்தும் விதமாக, ஏப்ரல் 19 இற்கு முன் கோவிட்-19 நோய்ப்பரவல் இலங்கையில் “நின்றுவிடும்” என சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சி அவர்களது அறிவித்தல் வெளியானது. தனது இந்த முடிவுக்கான அறிவியல்பூர்வமான சான்றுகளையோ, இந்த வைரசுடன் போரிட்டுக்கொண்டிருக்கும் சுகாதாரத்துறை தொழில்நெறிஞர்களாலேயே இது தனக்குத் தெரிவிக்கப்பட்டதெனும் கூற்றையோ அமைச்சர் இன்னமும் முன்வைக்காத நிலையில், ஒரு புதிய பாராளுமன்றம் ஜூன் 2ம் திகதி கூடவேண்டுமானால் தேர்தல் நடவடிக்கைகளை ஏப்ரல் 20 அளவில் தொடங்கவேண்டும் என தேர்தல் ஆணையகம் தெரிவித்திருப்பது முக்கியத்துவமிக்கதாகும். கோவிட் பெருந்தொற்று ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையில் இது சாத்தியமில்லை என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்தது.
உலகெங்கும் கோவிட் -19 பெருந்தொற்று பரவத் தொடங்கியிருந்த வேளையில், மார்ச் 2ம் திகதி சனாதிபதியால் மேற்கொள்ளப்பட்ட காலப்பொருத்தமற்ற பாராளுமன்றக் கலைப்பானது, வளர்ந்துவந்த நெருக்கடிக்கு பாராளுமன்றமொன்று இயங்காத நிலையிலேயே எதிர்வினையாற்ற வேண்டிய நிலைக்கு இலங்கையைத் தள்ளியது. ஜூன் 2ம் திகதிக்கு முன்னர் புதிய பாராளுமன்றம் தேர்ந்தெடுக்கப்படாவிட்டால் அது நாட்டினை ஒரு அரசியலமைப்பு நெருக்கடிக்குள்ளும் தள்ளும். இப் பெருந்தொற்றுக்கு நடுவே தேர்தல் பணிகளை முன்னெடுக்கத் தொடங்குவது தீவிரமான ஆபத்துக்களை விளைவிக்கும் எனும் திட்டவட்டமான பார்வையினை தேர்தல் ஆணையமும் மதிப்பார்ந்த மருத்துவத் தொழில்நெறிஞர்களும் கொண்டிருக்கிறார்கள்.
வரக்கூடிய அரசியலமைப்பு நெருக்கடியை எவ்வாறு தவிர்ப்பது என்பது குறித்து உயர் நீதிமன்றத்தின் கருத்தினை நாடுமாறு தேர்தல் ஆணையம் சனாதிபதியினை வேண்டிக்கொண்டுள்ளது. பாராளுமன்றத்தைக் கலைக்க வேண்டாமென நாம் வேறு சில சிவில் சமூக அமைப்புக்களுடன் சேர்ந்து தொடக்கத்திலேயே கேட்டிருந்தோம். அந்தக்கோரிக்கை கருத்திலெடுக்கப்படாததையிட்டு எமது ஆழ்ந்த விசனத்தையும் வெளிப்படுத்தியிருந்தோம். அதன் பின்னரும் நாம் பாராளுமன்றக் கலைப்பினை இரத்துச் செய்யுமாறும் பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறும் கேட்டிருந்தோம். பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறுவதற்கான அனுமதியை அரசியலமைப்புச் சட்டமும் பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டமும் சனாதிபதிக்கு அளித்திருக்கிறது என்பதை நாம் இங்கே வலியுறுத்த விரும்புகிறோம்.
தேர்தல்கள் காலவரையறையின்றிப் பின்போடப்பட முடியாதென்பதிலும் அவ்வாறு பின்போடப்படக் கூடாது என்பதிலும் நாம் மிகத் தெளிவாயுள்ள அதேவேளை, இந்தப் பெருந்தொற்றுக் காரணமாக பெரும் உயிராபத்து நிலவும் இந்நிலையில் தேர்தல்கள் நடத்தப்படக்கூடாது என்பதிலும் நாம் விழிப்பாயுள்ளோம். இந்நெருக்கடியிலிருந்து இலங்கை எவ்வகையிலும் மீண்டுவிடவில்லை. தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை குறைவாயிருக்கும் நிலை, பரிசோதனைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் செய்யப்படுவதன் தொடர்விளைவாக இருக்கலாம் என சுகாதாரத்துறை தொழில்நெறிஞர்கள் எச்சரித்திருக்கிறார்கள். ஒப்பீட்டளவில் இலங்கையின் இறப்பு விகிதம் குறிப்பிடத்தக்களவு இருப்பதால், தொற்றிலிருந்து நாம் பாதுகாப்பாக வெளிவர முன்னர் தீவிரமான பரிசோதனை நடவடிக்கைகளை தொடங்க வேண்டும் எனவும் அவர்கள் எச்சரிக்கிறார்கள்.
தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடப்பதற்கு, சுதந்திரமாக மக்கள் நடமாட அனுமதிக்கும் ஒரு சூழலில் தேர்தல்கள் நடத்தப்படவேண்டும். அத்துடன், சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு வேண்டிய அளவுக்கு பொதுமக்களின் அன்றாட வாழ்வு மீள்வதற்கு முன்னர், உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) பரிந்துரைகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறான ஒரு தேர்தலுக்கு, மக்களிடையே சுதந்திரமாக தேர்தல் பரப்புரைகளை செய்வதற்கான கால அவகாசமொன்று தேவைப்படுவதுடன், அவசர அவசரமாக அது நடத்தப்படவும் கூடாது. இலங்கையானது கோவிட்-19 இற்கான பதில் நடவடிக்கைகளில் இன்னமும் அந்த நிலையை அடையவில்லை என்பதை நாம் கடுமையாக வலியுறுத்திநிற்கிறோம்.
அதனால், அண்மைய நாட்களில் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படக் கூடாது எனவும், மாற்றாக, சட்டத்தின் வரம்புகளுக்கு உட்பட்டு பாராளுமன்றத்தை சனாதிபதி மீளக் கூட்ட வேண்டும் எனவும் நாம் வலுவான கோரிக்கையை முன்வைக்கின்றோம். அமர்விலுள்ள சட்டவாக்கத் துறையின் செயல்முனைப்பான பங்கெடுப்புடனேயே கோவிட்-19 நெருக்கடி அதிக வினைத்திறனுடன் தீர்க்கப்படும் எனவும் நீதித்துறையின் பங்கெடுப்புடனான உதவியுடன் மட்டுமே நிறைவேற்றுத்துறை நடவடிக்கைகள் வலுப்படுத்தப்படும் எனவும் நாம் நம்புகிறோம். இந்த அவசியமிக்க, அவசரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே, கோவிட்-19 பெருந்தொற்றுக்கான முறைப்படியான வினைத்திறன் மிக்க எதிர்வினையும் அத்தொற்றிலிருந்தான மீட்சியும் சுதந்திரமான, நியாயமான தேர்தலும் சாத்தியப்படும்.
—
பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பு
பெண்கள் வள மையம், குருணாகலை
பெண்கள் அபிவிருத்தி மையம், பதுளை
விழுது மனிதவள மேம்பாட்டு நிறுவனம்
கிராமிய பெண்கள் முன்னணி, காலி
பெண்கள் ஒத்துழைப்பு முன்னணி, கண்டி