சமூக மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சகோதரி ஒட்றி றிபேரா 2021 ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி இவ்வுலகிலிருந்து விடைபெற்றார். ஒட்றி பிரெலீஷியா றிபேரா எனும் பெயரைக்கொண்ட இவர், 1933 ஒக்டோபர் 14 ஆம் திகதி கொழும்பில் பிறந்தார். பிரஸ்பிடீரியன் பெண்கள் பாடசாலையிலும், தெஹிவளை மெதடிஸ்த கல்லூரியிலும் கல்விகற்ற இவர், 1956 ஆம் ஆண்டில் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குப் பிரவேசித்து தனது கலைமாணி பட்டப்படிப்பில் முதலாம் கட்டத்தை மட்டும் நிறைவுசெய்தார். பின்னர் இலங்கை மத்திய வங்கியில் தொழிலில் இணைந்துகொண்டார். 13 வருடங்களாக அங்கு பணியாற்றிய இவர் கிறிஸ்தவ தொழிலாளர் சகோதரத்துவ இயக்கத்துடன் இணைந்து தனது சமூக வாழ்வுக்கு அடித்தளமிட்டுக் கொண்டார். 1960 ஆம் ஆண்டில் அதன் இளைஞர் பிரிவுக்குத் தலைமை தாங்கிய ஒட்றி, சமூக மாற்றத்துக்கான தனது சிந்தனைப்போக்கை இதனூடாக மெருகூட்டிக்கொண்டார். அதேபோல தன்னுடன் இருந்த இளைய சமூகத்துக்கு இதனூடாக வழிகாட்டினார்.
1970 ஆம் ஆண்டானது, இந்த நாட்டு அரசியலின் முக்கிய திருப்புமுனையாக அமைந்த இளைஞர் போராட்ட அரசியலுடன், மேலும் விசேடமான சமூகக் கருத்தாடலொன்று ஆரம்பமான காலகட்டமாகும். 1976 ஆம் ஆண்டில் கலாநிதி குமாரி ஜயவர்தனவுடன் இணைந்து இலங்கையின் முதலாவது சுயேட்சை பெண்ணிய அமைப்பான ‘பெண்கள் குரல்’ எனும் அமைப்பையும் மற்றும் மேலும் பல அமைப்புக்களையும் உருவாக்க உதவிபுரிந்தார். 1980 ஆம் ஆண்டின் நடுப்பகுதியிலிருந்து ஒரு தசாப்தமாக மாணவர் கிறிஸ்தவ அமைப்பு, இலங்கை தொழிலாளர் கூட்டமைப்பு மற்றும் 1985 இலிருந்து 1995 வரை தேசிய கிறிஸ்தவப் பேரவைப் பெண்களின் செயலாளராகச் செயற்பட்டதன் காரணமாக அவரது பெண்ணிய விடுதலைக் கொள்கையில் பாரிய தாக்கங்கள் ஏற்பட்டன.
குறிப்பாகப் பெருந்தோட்டத்துறைப் பெண்கள் முகங்கொடுக்கும் அழுத்தமான நிலைமை தொடர்பில் அதிகமாகக் கவலைப்பட்டு இந்த நாட்டில் பெண்கள் அமைப்பைக் கட்டியெழுப்புவதற்காகத் தனது அர்ப்பணிப்பை உறுதிப்படுத்த இதன்மூலம் அவரால் முடியுமாக இருந்தது. 1981 ஆம் ஆண்டில் இந்நாட்டில் பெண்கள் அமைப்புக்களின் வலுவான கூட்டணியைக்கொண்ட பெண்கள் செயற்பாட்டுக்குழு மற்றும் 1989 ஆம் ஆண்டில் எல்லாப் பாகங்களிலும் நிகழ்கின்ற படுகொலைகளுக்கு எதிராகக் கட்டியெழுப்பப்பட்ட லக்பிம தாய்மார்கள் மற்றும் புதல்வியர்கள் ஆகிய பெண்கள் அமைப்புசார் வலையமைப்புக்களை உருவாக்க முன்னோடியாகத் திகழ்ந்த ஒட்றி, இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வொன்றைப் பெறுவதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார். 1978 இல் தோட்டத்தொழிலாளர்களின் நிலைமை பற்றிய அவரது பணிச்செயற்பாடுகள் நீதி மற்றும் சமத்துவத்திற்கான அமைப்பை (MIRJE) தாபிப்பதற்கும், இன முரண்பாட்டுக்கான அரசியல் ரீதியான தீர்வைப் பெறுவதற்கான பணிகளுக்கும் அவரது வாழ்நாள் முழுவதையும் சிறுபான்மை மக்களுக்கான ஒத்துழைப்பை வழங்குவதற்கும் அவரால் முடியுமாக இருந்தது.
ஒட்றி சிறந்ததொரு மனிதாபிமானியாக இருந்ததுடன், மனித உரிமைகள், சுயநிர்ணய மற்றும் பெண்கள் உரிமைகளுக்கான போராட்டங்களில் எண்ணற்ற செயற்பாட்டாளர்களுக்கு வலிமைமிக்கதும் ஒத்துழைப்பு வழங்கக்கூடியதுமான கோபுரமாகத் திகழ்ந்தார். அவரது வீடு தென்பகுதியில் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகிய செயற்பாட்டாளர்களுக்கும், வடக்கிலிருந்தும் கிழக்கிலிருந்தும் வருகின்றவர்களுக்கும் எப்போதும் பாதுகாப்பான இடமாக இருந்தது. தோட்டப் பெண்தொழிலாளர்கள், விவசாயத்தில் ஈடுபடும் பெண்கள், ஆடைத்தொழிற்சாலைப் பெண்கள், காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினரின் அல்லது நம்பிக்கையை அடிப்படையாகக்கொண்ட மக்கள் போன்றோரின் உரிமைகளுக்காக அவரது அமைதியான பணிச் செயற்பாடுகள் அறியப்படாததும் சொல்லப்படாததுமான உண்மைகளாகும். முதிய வயதை அடைந்திருந்த போதிலும் சமூக நலனுக்காக தனது முழு வாழ்வையும் அர்ப்பணித்த அவரது சிந்தனைத் தலைமுறை எப்போதும் இளமையானது; உத்வேகமானது. ஜனநாயகமானதும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கின்றதும் எல்லோருக்கும் சமத்துவமளிக்கின்றதுமான அமைதியான நல்லிணக்கத்தைக்கொண்ட சமூகமொன்றைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற அவரது கனவு நனவாவதைக் காண வேண்டும் என்பதே அதற்குக் காரணமாகும். அன்பான தோழியாகவும், சக ஊழியராகவும் ஆரம்பத்திலிருந்தே அவருடன் பணியாற்றிய பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பான நாம், அவரது இழப்பினால் மீளாத்துயரத்தில் இருக்கின்றோம். ஒட்றி றிபேரா ஆகிய அந்த மனிதத்துவத்தால் நிரம்பியிருந்த சமூகச் செயற்பாட்டாளர், சகோதரி இன்று எம்மிடமிருந்து விடைபெற்றிருந்தாலும் அவரது சமூகச் செயற்பாட்டுச் சிந்தனைகள் மற்றும் செயற்பாட்டுப் போராட்டத்துக்கு அவர் வழங்கிய பங்களிப்புக்கள் என்பவற்றை இதயபூர்வமாக நினைவில்கொள்கின்றோம். ஒட்றி, உங்களது பயணம் சிறப்பாக அமையட்டும்.