16 Days of Activism against GBV 2014 campaign

இலங்கையில் அண்மையில் நிறைவுற்ற பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாட்கள் செயற்பாடு எனும் உலகளாவிய பிரசாரமானது, பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான மன்றத்தின் அங்கத்தவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஓர் ஒருமித்த முயற்சியாகும். 2014ஆம் ஆண்டுக்கான இந்த 16 நாட்கள் செயற்பாட்டின் போது நாட்டில் பல்வேறு நிகழ்வுகளையும் செயற்பாடுகளையும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான மன்றம் ஏற்பாடு செய்திருந்தது.

குறிப்பாக, அம்மன்றத்தின் அங்கத்துவ அமைப்புக்களுள் ஒன்றான பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பானது சமூக ஊடக வலையமைப்புக்கள் குறித்து மேலதிக விழிப்புணர்வை உருவாக்கும் பொருட்டும், அது குறித்த பிரசாரங்களை ஊக்குவிக்கும் பொருட்டும் Sri Lanka 16days campaign blog எனும் வலைப்பதிவினூடாக இணையத்தள பிரசாரமொன்றை முன்னெடுத்திருந்தது. அது குறித்த தகவல்கள் ‘பேஸ்புக்’ தளத்திலும், ‘டுவிட்டர்’ தளத்தில் #sl16days மற்றும் #16days ஆகிய சதுரக்குறியீட்டின் கீழும் பரப்பப்பட்டன. பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான மன்றத்தின் நிகழ்வுகள் மற்றும் செயற்பாடுகள், பெண்களுக்கெதிரான வன்முறை மற்றும் தொழில் துறையில் பெண்கள் ஆகிய விடயங்கள் பற்றிய தகவல் விளக்கப்படங்கள் (Infographics), அவந்த ஆர்டிகலவின் கேலிச்சித்திரத் தொடரொன்று, வலைப்பதிவுக் கட்டுரைகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து விருந்தினர் பதிவுகள் என்பவற்றை இவ்வலைப்பதிவு உள்ளடக்கியிருந்தது. இவ்வருடம் ஆண் – பெண் என இரு பாலாரிடமிருந்தும் கவிதைகள், கட்டுரைகள் மற்றும் கேலிச்சித்திரங்கள் என பல்வகையான விருந்தினர் பதிவுகளை எம்மால் பெற்றுக்கொள்ள முடிந்தமை இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டும்.

அதேவேளை, பெண்களுக்கெதிரான வன்முறையை முடிவுறுத்துவதற்கான சர்வதேச தினமாகிய நவம்பர் 25ஆம் திகதியை நினைவுகூரும் முகமாக “பெண்களுக்கெதிரான வன்முறையை முடிவுறுத்துவதற்காக ஒன்றிணைவோம்” எனும் பிரசாரத்தின் ஓர் அங்கமாகிய “உங்கள் சுற்றுப்புறத்தை செம்மஞ்சள்நிற மயமாக்குங்கள்” (Orange Your Neighborhood) எனும் பிரசாரம் பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பினால் முன்னெடுக்கப்பட்டது. இந்த செம்மஞ்சள்நிற மயமாக்கல் எனும் பிரசாரம் 16 நாட்கள் பிரசாரத்தின் ஊடாகவும் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.