ACTFORM meets Minister of Foreign Employment, Thalatha Athukorala

புலம்பெயர் பெண் தொழிலாளர்களின் சமகால நிலைமைகள் பற்றியும் அவர்களின் நிலைமைகளை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மேலும் முன்னேற்றுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் கலந்துரையாடும் பொருட்டு புதிதாக நியமிக்கப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரளவை புலம்பெயர் தொழிலாளர்களுக்கான செயற்பாட்டு வலையமைப்பு (ACTFORM) சந்தித்தது.

ACTFORM வலையமைப்பினருக்கும் அமைச்சருக்கும் இடையில் நடைபெற்ற முதலாவது சந்திப்பும் இதுவாகும். இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட சில முக்கியமான விடயங்கள் வருமாறு;
• இருதரப்பு உடன்படிக்கை நாடுகளுக்கிடையில் கைச்சாத்திடப்படுவதை முடிவுறுத்தல்.
• ஐந்து வயதுக்குட்பட்ட பிள்ளைகளைக் கொண்டுள்ள தாய்மார்கள் தொழில்நிமித்தம் வெளிநாட்டுக்குச் செல்வதை கட்டுப்படுத்துகின்ற சட்டத்தை நீக்குதல். (இச்சட்டம் இருப்பதன் காரணமாகவே அதிகமான பெண்கள் சுற்றுலா நுழைவனுமதியைப் (Visit Visa) பெற்றுக்கொள்கின்றனர். இது அவர்களின் பாதுகாப்புக்குத் தடையாக அமைவது மட்டுமன்றி, தமது விருப்பத்தேர்வின் அடிப்படையில் தொழிலொன்றைப் பெற்றுக்கொள்வதற்கு அவர்களுக்குள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிராகவும் அமைகின்றது.)
• வீட்டுப் பணியாளர்களுக்கான கௌரவமான வேலையை (Decent Work for Domestic Workers) கருத்திற் கொள்ளும் சர்வதேச தொழிலாளர் தாபனத்தின் சமவாயத்தை ஒப்புறுதிப்படுத்தல் – C189
• நாடு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களின் பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துதல்.
• அமைச்சரவையால் 2000ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட தேசியக் கொள்கையை அமுல்படுத்தல்.
• பொருத்தமான உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்புச் செய்து போதியளவு பயிற்சிகளை அவர்களுக்கு வழங்குதல்.

புலம்பெயர் பெண் தொழிலாளர்களின் பிள்ளைகளினதும் அவர்களில் தங்கிவாழும் ஏனையவர்களினதும் பாதுகாப்பானது அரசின் பொறுப்புக்களில் ஒன்றாகும் என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஏற்றுக்கொள்வதற்கு வாக்குறுதி அளித்துள்ளதாக பெண்கள் குறித்த அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகையால் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிரான துஷ்பிரயோகத்துக்கும், கொடுமைகளுக்கும் மற்றும் அநீதிகளுக்கும் எதிராக அரச மட்டத்திலமைந்த பாதுகாப்புச் செயன்முறைகளை மேற்கொள்வதோடு, ஊழியர் சேமலாப நிதியத்துக்குச் (EPF) சமமான சேமலாப நிதியம் ஒன்றும், ஊழியர் நம்பிக்கை நிதியம் ஒன்றும் மற்றும் பணிக்கொடைக் கொடுப்பனவுகளையும் அவர்களுக்கு உரித்தாக்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.

சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் என்ற வகையில் ACTFORM ஆனது புலம்பெயர் பெண் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும், முன்மொழியப்பட்டுள்ள செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்பதற்கும் தயார்நிலையில் உள்ளதாக உறுதியளிக்கின்றது. இச்சந்திப்பில் ACTFORM சார்பில் அதன் அங்கத்தவர்களான வயலட் பெரேரா, மனோரி விதாரண, ரமணி முத்தெடுவாகம, வேலாயுதன் ஜெயச்சித்ரா, பாத்திமா புகாரி, லக்ஸ்மி விஜேசேகர மற்றும் சந்த்ரா கஸ்தூரி ஆராச்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.