Increasing women’s political representation: a discussion on current reforms

அரசியலமைப்பு மற்றும் தேர்தல் முறைமை சீர்திருத்தங்கள் குறித்துப் பேசப்படும் சமகாலப் பின்னணியில், பாராளுமன்றத்தில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் குறித்து கலந்துரையாடும் பொருட்டு தேர்தல் முறைமை சீர்திருத்தங்களில் நிபுணத்துவம் பெற்ற கார் வொல்லனுடனான (Kare Vollan) ஆலோசனை அமர்வொன்று நேற்று இடம்பெற்றது. வெறும் முன்மொழிவுகளுக்கு அப்பால் உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பை உறுதிப்படுத்துகின்ற வகையிலான சீர்திருத்தங்களை முதன்முறையாக இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்துள்ளார். இதன் பின்னணியில், இலங்கையின் உள்ளூர், மாகான மற்றும் தேசிய மட்டங்களில் பெண்களின் சட்டவாக்கப் பிரதிநிதித்துவம் குறித்து கலந்துரையாடும் நோக்கில் பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பானது மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்துடன் சேர்ந்து இந்த ஆலோசனை அமர்வை ஏற்பாடு செய்திருந்தது.

நோர்வே நாட்டைச் சேர்ந்த கார் வொல்லன், தேர்தல் முறைமைகள் தொடர்பில் சர்வதேச மட்டத்தில் புகழ்பெற்ற நிபுணராவார். இவர் வேனிஸ் ஆணைக்குழுவின் (Venice Commission) ஆலோசகருள் ஒருவராகப் பணியாற்றி வருவதுடன் பொஸ்னியா, சிம்பாப்வே, கென்யா, பிஜி உட்பட பல்வேறு நாடுகளிலும் பணிபுரிந்துள்ளார். நேபாளத்தில் சகலரையும் உள்ளடக்கிய தேர்தல் முறைமை ஒன்றை உருவாக்குவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் அரசியலமைப்பு நிர்ணய சபைக்கும் உதவும் நோக்கில் கடந்த 2008ஆம் ஆண்டில் இருந்து அந்நாட்டுக்கு இவர் தொடர்ச்சியான விஜயங்களை மேற்கொண்டுள்ளார். ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) நிகழ்ச்சித்திட்டமான “நேபாளில் பங்குபற்றலுடனான அரசியலமைப்பைக் கட்டியெழுப்புதலுக்கு ஆதரவளித்தல்” (Support for Participatory Constitution Building in Nepal) எனும் நிகழ்ச்சித்திட்டம் உட்பட பல்வேறுபட்ட சர்வதேச நிறுவனங்களுடன் இவர் மிக நெருக்கமாகப் பணியாற்றியுள்ளார். மேற்படி நிகழ்ச்சித்திட்டமானது மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் (CPA) ஸ்தாபகப் பணிப்பாளருள் ஒருவரான ரொஹான் எதிரிசிங்கவின் தலைமையின் கீழ் 2010ஆம் ஆண்டில் இருந்து 2014ஆம் ஆண்டு வரை முன்னெடுக்கப்பட்டது.