Call for submissions

பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கெதிரான 16 நாட்கள் செயற்பாட்டைக் கொண்ட பிரசாரம் 2015

நவம்பர் 25 – டிசம்பர் 10

16 days banner with hashtag_tamil

தவறிழைத்தவர்கள் தண்டனைகளில் இருந்து தப்பி சுதந்திரமாக நடமாடும் கலாசாரமொன்றில் நிகழ்ந்தேறுகின்றதும், தனிநபர் மனித உரிமைகளைத் தகர்த்தெறியத்தக்கதுமான வன்முறைகள் தொடர்பில் பிரதான கவனத்தை ஈர்க்கச்செய்யும் நோக்கில், பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கெதிரான 16 நாட்கள் செயற்பாட்டைக் கொண்ட பிரசாரமானது இப்போதிருந்து இன்னும் ஒரு மாதத்தில் உலகளாவிய ரீதியில் முக்கிய இடத்தைப் பெறவுள்ளது.

அடிக்கடி தெருக்களிலும், வீடுகளிலும் மற்றும் வேலைத்தளங்களிலும் பெண்கள் வன்முறைக்குள்ளாகின்ற அனுபவத்தைப் பெறுகின்றமை நன்கறியப்பட்ட ஒன்றே. அத்தகைய பின்னடைவுகளுக்கு மத்தியிலும் அவர்கள் தமது உரிமைகளைப் பாதுகாக்கும் வண்ணம் தங்களுடைய வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்கின்றனர். இதன் காரணமாகவே 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம் திகதியன்று தொடங்கவுள்ள “இலங்கை 16 நாட்கள் செயற்பாடு” என்ற பிரசார முன்னெடுப்பின் ஊடாக பெண்கள் உரிமைகளுக்கென சில வழிவகைகளில் குரல் கொடுப்பதற்கு உங்களை நாம் அழைக்கின்றோம்.

“அதிகாரத்துக்கான எமது தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டு அமையப்பெற்ற பாரபட்சத்தினதும் சமத்துவமின்மையினதும் முழுமையானதோர் ஆணாதிக்க முறைமை என்ற ரீதியில் இரானுவவாதத்துடனான (militarism) தொடர்புகளை நாம் தொடர்ச்சியாக ஏற்படுத்தி வரும் அதேவேளை, இவ்வாண்டுக்குரிய 16 நாட்கள் பிரசார முன்னெடுப்புக்கான தொனிப்பொருளானது மோதல்சார்ந்த வன்முறை நிலைமைகள், உரிய சமாதான நிலைமைகள் மற்றும் பல்வேறுபட்ட கல்வி அமைப்புக்கள் என்பவற்றில் இராணுவவாதத்துக்கும் கல்விக்கான உரிமைக்கும் இடையிலான தொடர்புடைமை குறித்துக் கவனம் செலுத்தவுள்ளது.” (www.16dayscwgl.rutgers.edu)

இலங்கையில் 16 நாட்கள் செயற்பாட்டின் போது பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான மன்றத்தின் (GBV Forum) அங்கத்தவர்கள் 2015ஆம் ஆண்டுக்கான உலகளாவிய தொனிப்பொருள் சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபடவுள்ள அதேவேளை, விழிப்புணர்வூட்டல்களை மேற்கொள்ளவுள்ளதுடன் நாட்டில் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுடன் தொடர்புடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பொறிமுறைகளையும் அறிமுகப்படுத்த உள்ளனர்.

மேற்படி மன்றத்தின் அங்கத்துவ அமைப்புக்களுள் ஒன்றான பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பானது இவ்வாண்டுக்கான இலங்கையின் 16 நாட்கள் செயற்பாட்டுப் பிரசார முன்னெடுப்புக்குரிய உங்களது பங்களிப்புக்களையும் வரவேற்கின்றது. பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை இனங்கண்டு அடையாளப்படுத்தும் வகையிலமைந்த உங்களது சிந்தனைகள், அனுபவங்கள் அல்லது அது தொடர்பான எந்தவொரு விடயத்தையும் எமக்கு அனுப்பிவையுங்கள். அவை உங்களது கலைப்படைப்புக்கள், எழுத்தாக்கங்கள், புகைப்படங்கள், கட்டுரைகள், குறுந்திரைப்படங்கள், கேலிச்சித்திரங்கள், ஆவணப்படங்கள், வலையொலிகள் (Podcasts) போன்றவைகளுள் எவையாகவும் இருக்க முடியும். விழிப்புணர்வை ஏற்படுத்தி பால்நிலை அடிப்படையிலான வன்முறை பற்றிய கருத்தாடல் ஒன்றுக்கு வழிவகுக்கக் கூடியவையாக அவை அமைய வேண்டும். சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலம் என எந்த மொழியிலும் உங்களது பங்களிப்புக்கள் அமையப் பெறலாம். பிரசுரத்திற்கு உகந்தவை என ஏற்றுக்கொள்ளப்படின் அவை Sri Lanka 16 Day’s blog என்ற வலைப்பதிவில் பிரசுரிக்கப்படுவதுடன் எமது மன்ற அங்கத்தவர்களின் இணைய அலைவழியினூடாக பரந்த அடிப்படையில் பகிரப்படவும் உள்ளன.

உங்களுடைய கட்டுரைகள், விவரணங்கள் அல்லது காணொளிகள் போன்றவற்றை #16days மற்றும் #sl16days போன்ற சதுரக் குறியீட்டுடன் உங்களது சொந்த இணையத்தளம், வலைப்பதிவு, டுவிட்டர் அல்லது பேஸ்புக் தளத்தில் பதிவிடுவதற்கான விருப்பத்தேர்வும் உங்களுக்கு உள்ளது. அத்தகைய தளங்கள் எவையும் உங்களுக்கு சொந்தமாக இல்லாதிருப்பின், உங்கள் ஆக்கங்களை நேரடியாக எமக்கு அனுப்பிவைத்தால் உங்கள் சார்பில் அவற்றை நாம் பதிவிட தயாராக உள்ளோம். Sri Lanka 16 days campaign என விடயத் தலைப்பிட்டு உங்களது பங்களிப்புக்களை wmcsrilanka@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரி ஊடாக எமக்கு அனுப்பி வையுங்கள்.

பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கெதிரான 16 நாட்கள் பிரசார முன்னெடுப்பானது ஒவ்வோர் ஆண்டும் பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினமாகிய நவம்பர் மாதம் 25ஆம் திகதியன்று ஆரம்பமாகி, சர்வதேச மனித உரிமைகள் தினமாகிய டிசம்பர் மாதம் 10ஆம் திகதி வரை இடம்பெற்று வருகின்றது.