Thinakkural: அபாயா விவகாரம்;எந்த ஆடை அணிய வேண்டும் என்பதை பெண்களே தீர்மானிக்க வேண்டும்

Source: Thinakkural

நேர்காணல்: பிரியதர்ஷினி சிவராஜா

ஆணாதிக்க சமூகம் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளவும், தமது தவறுகளை நியாயப்படுத்தவும் பெண்களை பலிக்கடாவாக்க ஒருபோதும் தயங்காது. அதன் ஒரு அம்சமாகவே அபாயா விவகாரத்தை நான் பார்க்கின்றேன் என்று பெண்ணியலாளரும், மட்டக்களப்பு சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் முன்னாள் பணிப்பாளருமான சரளா இம்மானுவெல் கூறினார். சுமார் 20 ஆண்டு காலம் கிழக்கில் பெண்கள் உரிமைகளுக்காக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வரும் சரளா இம்மானுவெல் தற்போதைய அரசியல் சூழ்நிலை பற்றி பல்வேறு கருத்துக்களை எம்முடனான நேர்காணலில் பகிர்ந்து கொண்டார். அவர் இந்நேர்காணலில் மேலும் தெரிவித்ததாவது:

கேள்வி:நல்லாட்சி அரசாங்கத்தினால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் பற்றியும் செயற்பாடுகள் பற்றியும் நீங்கள் கருதுவது என்ன?

பதில்:2015ஆம் ஆண்டு நிலைமாறுகால நீதியை இலங்கையில் ஸ்தாபிப்பதற்கு புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த போது மிகுந்த எதிர்பார்ப்பும் ஆர்வமும் எமக்கு இருந்தது. புதிய அரசியல் அமைப்பு, நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகள் போன்ற விடயங்கள் பற்றி அப்பொழுது பரவலாகப் பேசப்பட்டது. ஆனால் இந்த விடயங்கள் பற்றி நாங்கள் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக பேசி வந்திருக்கின்றோம். அதற்காக மக்களின் சார்பில் நாங்கள் குரல் கொடுத்திருக்கின்றோம். எமது செயற்பாடுகளுக்கு 2015ஆம் ஆண்டு அரசியல் ரீதியான பலமான ஒத்துழைப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தான் அப்பொழுது எங்களிடம் இருந்தது. வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் காணாமற்போனோர் அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம் போன்றன நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் பிரதானமாக நிலைமாறுகால நீதிக்கான இதர பொறிமுறைகளும், புதிய அரசியலமைப்பு என்ற விடயமும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இந்த இலக்குகளை அடைவதற்கு அரசியல் அர்ப்பணிப்பும், ஜனாதிபதி முதல் பாராளுமன்றம் வரை அதற்கான ஒத்துழைப்பும் தேவை. தென்னிலங்கையில் இவ்விடயங்கள் பற்றி பரந்தளவிலான உரையாடல்கள் இடம்பெற்றிருக்க வேண்டும்.

கேள்வி:கிழக்கில் நல்லிணக்கத்தினை உருவாக்குவதிலும் இனங்களுக்கிடையே சகவாழ்வினை ஏற்படுத்துவதிலும் தற்போதைய சூழ்நிலையில் எவ்வாறான சவாலை எதிர்கொள்கின்றீர்கள்?

பதில்:ஏப்ரல் 21ஆம் திகதிக்குப் பின்னர் எங்களுக்கு மிகவும் சவாலான காலகட்டம் ஒன்று உருவாகியுள்ளது. எமது முஸ்லிம் சகோதரிகள் வன்முறை அச்சத்தில் உள்ளனர். வன்முறைகள் தலைதூக்கும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. தமிழ் முஸ்லிம் பெண்கள் மத்தியில் ஓர் பிளவு நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு இடையிலான இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதுடன் நடைபெறும் சம்பவங்கள் இனங்களுக்கிடையிலான இனப்பிரிவினையை தீவிரப்படுத்திக் கொண்டு செல்கின்றன. இவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்க ஒரு பொது வேலைத்திட்டம் இப்பொழுது தேவையாக உள்ளது.

கேள்வி:ஏப்ரல் 21ஆம் திகதிக்குப் பின்னர் இலங்கையில் ஓர் இனத்திற்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்படும் வெறுப்புணர்வு மிக்க சூழலில் நாட்டில் சுமுகநிலையை எவ்வாறு ஏற்படுத்த முடியும்?

பதில்:பொது மாற்றம் ஒன்றை முன்னிலைப்படுத்தி அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குரோத உணர்வினையும், வன்முறைப் போக்கினையும் எங்களால் ஒரே நாளில் நிறுத்திவிட முடியாது. முஸ்லிம் கடைகளில் சாப்பிட வேண்டாம், முஸ்லிம் வர்த்தக நிலையங்களை புறக்கணியுங்கள் போன்ற நிபந்தனைகள் எங்களைப் போன்றவர்களுக்கு விரக்தியையும், குழப்பத்தினையும் ஏற்படுத்துகின்றது. இந்தவகையில் யுத்த காலத்தில் நாங்கள் மேற்கொண்ட மனித உரிமைகளைப் பாதுகாக்கும் பணிகளை மீள ஆரம்பித்து அவ்வாறான கலந்துரையாடல்களை சமூகத்தில் ஏற்படுத்த வேண்டும். கடந்த கால யுத்த சூழலை விட மிகவும் சக்திவாய்ந்த பயங்கரமான ஓர் சமர்க்களமாகவே இலங்கையின் இன்றைய சூழலை நான் காண்கின்றேன்.

கேள்வி:முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம், கட்டாய கருத்தடை விவகாரம் ஆகிய அனைத்திலும் பெண் உடல் என்பது வலிந்து பிணைக்கப்பட்டு அரசியலாக்கப்படுகின்றமை பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:பெண்களின் உடல்களும், பாலியலும் இங்கு அரசியலாக்கப்படுவது ஆணாதிக்க நலன்களுக்காகவே அன்றி வேறு எதற்காகவும் அல்ல. மலட்டுத்தன்மையை திட்டமிட்டு ஏற்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டு ஒரு குறிப்பிட்ட இனத்தின் மீது இன்று நேற்றல்ல கடந்த 2013 மற்றும் 2014ஆம் ஆண்டு முதல் முன்வைக்கப்படும் விடயமாக உள்ளது. ஆனால் இதுவரை இந்த பிரச்சினைக்கு அரசாங்கம் விஞ்ஞானபூர்வமான ஒரு தீர்வை வழங்கியுள்ளதா? முஸ்லிம் கடைகளில் சாப்பிட வேண்டாம். முஸ்லிம்கள் சமைக்கும் சாப்பாடுகளை உண்ண வேண்டாம் என்கின்றனர். அன்றாடம் வீடுகளில் உணவு தயாரித்து அதனை கடைகளில் கொடுத்து விற்கும் சாதாரண முஸ்லிம் பெண்களின் வாழ்வாதாரமே இங்கு பாதிக்கப்படுகின்றது. இவ்வாறான சர்ச்சையான விடயம் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்காமல் அமைதியாக இருப்பதானது ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு எதிரான கடும்போக்கினை வளர்த்து வேடிக்கை பார்க்கும் செயலாகும்.

கேள்வி:பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று முஸ்லிம் பெண்களின் ஆடைகளில் கட்டுப்பாடுகளை விதிப்பதனை நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா?

பதில்:எந்த ஆடையை அணிய வேண்டும் எந்த ஆடையை அணியக் கூடாது என்று தீர்மானிப்பதற்கு பெண்களுக்கு தான் முழு உரிமையும் உண்டு. நாட்டின் பாதுகாப்புக்காக என்று காரணம் காட்டுவது ஓர் பயங்கரமான உபாயமாகும். இந்த உபாயத்தினை தான் யுத்த காலத்திலும் பயன்படுத்தி மனித உரிமை மீறல்கள் பல இடம்பெற்றன. ஏப்ரல் 21 தற்கொலைக் குண்டுதாரிகள் அபாயா அணிந்து கொண்டும் முகத்தை மூடிக்கொண்டும் வந்தனரா? அவர்கள் டீசேர்ட்டும், காற்சட்டையும் அணிந்து கொண்டு தான் வந்தனர். அவ்வாறாயின் அந்த ஆடைகள் தானே நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வேண்டும். ஆணாதிக்க சமூகம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள தற்காத்துக்கொள்ள தமது செயல்களுக்கு நியாயம் கற்பிக்க பெண்களை பலிக்கடாவாக்கி துயரப்படுத்த ஒருபோதும் தயங்கி நிற்காது என்பதற்கு இந்த விவகாரம் சிறந்த எடுத்துக்காட்டு.

கேள்வி:முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தம் தேவை என்று தற்போது கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதனை வரவேற்கின்றீர்களா?

பதில்;நாங்கள் எதிர்க்கின்ற முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தில் இன்றைய அரசியல் சூழ்நிலையில் மாற்றங்களை மேற்கொள்வது என்பது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளது. இந்த சட்டத்தில் திருத்தம் தேவை என்ற மனமாற்றம் இந்த ஆணாதிக்க சமூகத்திற்கு ஏற்படுவதற்கு தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களும், முந்நூறுக்கும் மேற்பட்ட உயிர்ப் பலிகளும் தேவைப்பட்டுள்ளன. இந்த சட்டத்தினை மாற்றுவதற்கான துயர்மிகுந்த 30 ஆண்டுகால போராட்டத்தில் எமது முஸ்லிம் சகோதரிகளுடன் தமிழ் சிங்கள சகோதரிகளும் இணைந்திருக்கின்றனர். இந்த போராட்டங்களையும், பாதிக்கப்பட்ட பெண்களின் கோரிக்கைகளையும் சற்றேனும் பொருட்படுத்தாத இந்த சமூகம் இப்பொழுது அதனை மாற்றுவது பற்றி பேசுகின்றதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

கேள்வி:இலங்கையின் தற்போதைய சூழ்நிலையில் இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு பெண்கள் அமைப்புக்களின் பங்களிப்பு எவ்வாறானதாக இருக்க வேண்டும்?

பதில்:நாங்கள் சற்று பின்னோக்கி சென்று யுத்த காலத்தில் எமது செயற்பாடுகள் எவ்வாறு இருந்தன என்று ஆராய்ந்து அவற்றை மறுபரிசீலனைக்குட்படுத்தி முன்னெடுத்துச் செல்வதை தவிர இப்போதைக்கு வேறு வழிவகைகள் இல்லை. இனமுறுகல், இனங்களுக்கிடையிலான வெறுப்பு நிலை, சந்தேக மனப்பான்மை என்பன மேலோங்கியுள்ள நிலையில் பெண்கள் அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள், ஊடகவியலாளர்கள் என அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து இனங்களுக்கு இடையில் பொதுவான வேலைத்திட்டத்தினை ஏற்படுத்த வேண்டும். அதற்காக நாம் ஒவ்வொருவரும் எமது தனிப்பட்ட அடையாளங்களிலிருந்து விடுபட வேண்டும். கைதுகள், சித்திரவதைகள், வன்முறைகள், காணாமற்போதல், உயிரிழப்புகள் போன்ற விடயங்களுக்கு எதிராக அன்று நாம் செயற்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் நீதிக்காக சமூகத்தில் கலந்துரையாடல்களை உயிர்ப்புடன் நகர்த்தி சென்றதனைப் போன்று இன்றைய காலகட்டத்திலும் செயற்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கேள்வி:இலங்கையில் நல்லிணக்கம், நல்லாட்சி மற்றும் நிலைமாறுகால நீதி என்பனவற்றை நிலைநாட்டுவது தொடர்பில் உங்கள் நம்பிக்கையும் உறுதிப்பாடும் எவ்வாறு உள்ளது?

பதில்:பெண்களின் கோரிக்கையான நிலைமாறுகால நீதிக்காக நாங்கள் தொடர்ச்சியாக பணியாற்றுவோம். அதற்காக நம்பகத்தன்மையை ஏற்படுத்தல், தகவல் அறியும் சட்டம், பரஸ்பர நம்பிக்கையைக் கட்டியெழுப்புதல், புதிய அரசியலமைப்பு ஆகிய அனைத்து விடயங்களையும் முன்வைத்து நாங்கள் தொடர்ச்சியாக போராடுவோம். எமது போராட்டங்களுக்கு அரசாங்கத்தின் ஆதரவும் பங்களிப்பும் கிட்டுமாயின் அந்த இலக்கினை அடைவது இலகுவாக இருக்கும். இல்லையெனில் அதற்காக நாங்கள் துவண்டு பின்வாங்கி விடப் போவதும் இல்லை. நம்பிக்கையையும், உறுதிப்பாட்டையும் இழக்கப்போவதும் இல்லை.

Share the Post:

Related Posts