நிகழ்வுகள்
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜகபக்ஷ, 13 உறுப்பினர்களைக் கொண்ட ஒரே நாடு, ஒரே சட்டம் என்பதற்கான ஜனாதிபதி செயலணி ஒன்றை நியமித்துள்ளார். அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் பற்றிய அத்தியாயம் மற்றும் சர்வதேசச் சட்டம் என்பவற்றை முன்னிறுத்தி அவரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலானது தேசியம், மதம், குலம் அல்லது வேறு எவையேனும் காரணிகளின் அடிப்படையில் ஆளெவரும் சட்டத்தின் பாகுபாட்டுக்கு அல்லது விசேட கவனத்துக்கு ஆளாகக் கூடாது என்ற அடிப்படை உரிமைகளின் அமுலாக்கத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதை அதன் நோக்கமாக எடுத்துரைக்கின்றது.
குறித்த செயலணிக்கு பின்வரும் பணிப்பாணைகள் வழங்கப்பட்டுள்ளன –
1.இலங்கையினுள் ஒரே நாடு, ஒரே சட்டம் என்பதைச் செயற்படுத்துதல் தொடர்பாகக் கற்றாராய்ந்து அதற்காகச் சட்ட வரைவொன்றைத் தயாரித்தல்.
2.நீதி அமைச்சினால் இந்த விடயம் தொடர்பில் ஏலவே தயாரிக்கப்பட்டுள்ள சட்ட வரைவுகளையும் திருத்தங்களையும் கற்றாராய்ந்து அவற்றின் பொருத்தம் மற்றும் தகுந்த திருத்தங்கள் இருப்பின் அவற்றுக்கான முன்மொழிவுகளைச் சமர்ப்பித்தலும் அத்துடன் அவை தோதானவை எனக் கருதப்படின் அவற்றை உரிய சட்ட வரைவில் உள்ளடக்குதலும்.
நீதி அமைச்சை சூட்சுமமாகக் கைப்பற்றி அதன் பணிகளில் ஆதிக்கம் செலுத்தவே இந்த செயலணி நியமிக்கப்பட்டுள்ளது என்பது இங்கு தெளிவாகின்றது. இது சட்டவாட்சி, நீதி முறைமையின் முறையான தொழிற்பாடு மற்றும் சட்டவாக்கச் செயன்முறை ஆகியவற்றுக்கு ஏற்படுத்தப்பட்ட ஓர் அவமரியாதை ஆகும். உண்மையில், இந்த விடயம் குறித்து தன்னுடன் கலந்தாலோசிக்கப்படவில்லை என்றும், குறித்த செயலணியின் நியமனம் பற்றி தான் அறிந்திருக்கவில்லை என்றும், இத்தீர்மானம் குறித்து தான் அதிருப்தி அடைவதாகவும் நீதி அமைச்சர் கௌரவ. அலி சப்ரி அவர்கள் தெரிவித்திருந்தார். ஜனாதிபதி, தனது சொந்த அமைச்சரவை அமைச்சர்களையே புறக்கணித்துள்ளமை, இவ்விடயத்தில் மேற்கொள்ளப்பட்ட கணிசமான முன்னேற்றத்தையும் குறைமதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
இச்செயலணியின் தலைவராக பௌத்த துறவியும், அண்மைக்கால இலங்கை அரசியல் வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்குரிய நபராகவும் அத்துடன் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக வெளிப்படையாக இனவாதத்தைத் தூண்டுபவராகவும் அறியப்பட்ட, வணக்கத்துக்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். தேசியம், சமயம் மற்றும் சாதி அடிப்படையிலான பாரபட்சங்கள் பற்றிக் கலந்துரையாட அமைக்கப்பட்ட ஓர் அமைப்புக்கு அத்தகைய நபரொருவரின் நியமனத்தில் காணப்படும் உள்ளார்ந்த பக்கச்சார்பு பற்றிய இந்த அப்பட்டமான அலட்சியப்போக்கு குறித்து நாம் பீதியடைகின்றோம்.
மேலும், இச்செயலணிக்கான பதின்மூன்று உறுப்பினர்களுள் மற்றொரு சிறுபான்மை இனமான தமிழ் இனத்தைச் சேர்ந்த எந்தவொரு பிரதிநிதியும் நியமிக்கப்படவில்லை. இது, இன முரண்பாடு மற்றும் பாரபட்சம் பற்றிய எமது வரலாற்றைப் பார்க்கும் போது ஓர் ஆபத்தான நிலையாகும். மேலும், இந்த செயலணியிலுள்ள முஸ்லிம் உறுப்பினர்கள், குறித்த வர்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் வரை, இச்செயலணிக்கு வணக்கத்துக்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரர் தலைமை வகிக்கவுள்ளார் என்றோ அல்லது அதன் ஓர் உறுப்பினராக அவர் நியமிக்கப்படவுள்ளார் என்றோ அறிந்திருக்கவில்லை எனவும் அறிக்கையிடப்பட்டுள்ளது.
இவற்றுக்கு மேலதிகமாக, இச்செயலணிக்கு பெண்கள் எவரும் நியமிக்கப்படவில்லை என்பது மிகுந்த ஏமாற்றம் அளிக்கின்றது. குறிப்பாக, பெண்களின் வாழ்வில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும் தனியார் சட்டங்கள் மற்றும் வேறு சட்டங்கள் பற்றி கலந்துரையாடப்படவுள்ள மன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் இல்லாதது, இச்செயலணியின் உருவாக்கத்தின் பின்னாலுள்ள ஆணாதிக்கத் தூண்டுதல்களைத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.
சர்ச்சையைத் தோற்றுவித்தல்
இலங்கையிலுள்ள மகளிர் குழுக்கள், அதிலும் குறிப்பாக முஸ்லிம் மகளிர் குழுக்கள், முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தின் (MMDA) சீர்திருத்தத்துக்கான பிரசாரத்தை பல தசாப்தங்களாக முன்னெடுத்து வந்துள்ளனர். சட்டத்தின்முன் சமத்துவத்துக்கான சீர்திருத்தங்கள் மற்றும் சர்வதேச உரிமைகள் என்பன பல தடவைகள் எடுத்துக்காட்டப்பட்டு இருந்தன. உண்மையில், கடந்த சில மாதங்களில் இத்தகைய முயற்சிகளில் முன்னேற்றம் காணப்பட்டதுடன், இதுபற்றிய நிபுணர் குழு அறிக்கையும் நீதி அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்டு இருந்தது. அத்துடன், முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து விடயத்தில் தேவைப்படுத்தப்பட்ட அவசியமான திருத்தங்களை நீதி அமைச்சு தயாரித்து வருவதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
குறிப்பாக இந்த செயலணிக்கான தலைவரது நியமனத்துடன்கூடிய இச்செயலணியின் நியமனமானது, மேற்படி முயற்சிகளை உதாசீனம் செய்து குழிதோண்டிப் புதைக்கும் ஒரு செயலாகவே அமைகிறது. 2014ஆம் ஆண்டில், வணக்கத்துக்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரர் அளுத்கம நகரிலுள்ள முஸ்லிம்களின் வீடுகளையும் வியாபார நிலையங்களையும் தாக்குவதற்காகக் கலவரக் கும்பல்களைத் தூண்டியிருந்தார். அத்துடன் அவர் எவ்வித அடிப்படையுமற்ற பாதுகாப்புக் காரணங்களைக் கூறி, அக்காரணங்களுக்காக பொது இடங்களில் புர்கா அணிவதைத் தடைசெய்ய வேண்டும் என்பதை வெளிப்படையாகப் பிரசாரம் செய்திருந்தார். மேலும் அவர், உணவுப் பொருட்களுக்கான ஹலால் சான்றிதழை இல்லாதொழிப்பதற்கான போராட்டத்தின் முக்கிய புள்ளியாகவும் செயற்பட்டார். இச்செயற்பாடுகள் அனைத்தும் நச்சுத்தன்மை வாய்ந்த சிங்கள பௌத்த உணர்வொன்றின் எழுச்சிக்குப் பங்களிப்புச் செய்தன. அந்த உணர்வின் மீது எழுந்த அலை, நல்லாட்சிக் கட்டமைப்புக்களை வீழ்த்தி, ராஜபக்ஷ மீண்டும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வழிவகுத்தது. வணக்கத்துக்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரர் நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்துக்கான சிறைத்தண்டனையை அனுபவித்து வந்தபோது ஜனாதிபதியினால் அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது.
இந்த செயலணியை அமைப்பதற்கு வழிவகுத்த வெளிப்படையானதும் வெட்ககரமானதுமான செயல்நோக்கங்கள், பல ஆண்டுகளாக முஸ்லிம் பெண்களும் மகளிர் குழுக்களும் முன்னெடுத்து வருகின்ற பாரிய போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதாக அமைவதுடன், ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்குரிய மிக ஆழமான தனிப்பட்ட ஒழுங்குவிதிகளை மாற்றுவதற்கான கோரிக்கை அந்த சமூகத்திலிருந்தே வந்தது என்ற யதார்த்தத்தைப் பறித்தெடுப்பதாகவும் அமைகின்றது. பாராளுமன்ற உறுப்பினர் அமரசூரிய குறிப்பிடுவதைப் போல், “மனித உரிமைகள் சார்ந்த கடப்பாடுகளுக்கு இணங்க இச்சட்டங்களைக் கொண்டுவருவதற்கான தீவிர முயற்சியானது, நேர்மையும் ஆற்றலும் கொண்டவர்களினால் வழிநடாத்தப்படுகின்ற உண்மையான பிரதிநிதித்துவ மற்றும் ஆலோசனைச் செயன்முறையைத் தேவைப்படுத்தி நிற்கின்றது”. இந்த செயலணி உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட அளவுகோலும் கேள்விக்குறியாக அமைந்துள்ளது. ஏனெனில், அதன் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட இரு சட்டத்தரணிகள், தமது சட்டத் தொழிலில் 10 ஆண்டுகளைக்கூட பூர்த்தி செய்யாதவர்களாகக் காணப்படுகின்றனர்.
இது நாட்டுக்கு எதனைச் சொல்கிறது?
கடந்த சில மாதங்களாக சேதனப் பசளை, கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக (KNDU) சட்டமூலம், ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் மற்றும் 11 பேரின் கொலை தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் கைவிடப்பட்டமை போன்ற தீர்மானங்களுக்கு எதிராக பொதுமக்களின் அதிருப்தியும் ஆர்ப்பாட்டங்களும் அதிகரித்து வந்துள்ளமையைக் காணலாம். ஒரு மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் அமெரிக்க கம்பெனியொன்றுடன் செய்துகொண்ட திரவ இயற்கை வாயு (LNG) பற்றிய இரகசிய உடன்படிக்கைக்கு எதிராக ஜனாதிபதியின் கூட்டணியிலுள்ளவர்களே பேசியுள்ளனர். இச்செயலணியை நியமித்ததன் மூலம் இப்போது இந்த விடயங்கள் அனைத்தும் மூடி மறைக்கப்பட்டுள்ளமை தோல்வியடைந்து செல்கின்ற ஓர் அரசுக்கான அறிகுறிகளாகும்.
தனியார் சட்டங்களை ஆராய்வதற்காக சிங்கள பௌத்த தீவிரவாதப் போக்குடைய ஒருவரின் தலைமையிலான செயலணியின் பின்னாலுள்ள கருத்தியலானது, ஓர் இணக்கமான தேசத்தில் கோட்டாபய பற்றிய சொல்லாட்சியை மீண்டும் மீண்டும் பேசுபொருளாக்கக்கூடியதாக உள்ளது. கடந்த காலங்களில் தமது செல்வாக்கை மீளவும் பெற்றுக்கொள்ள தமக்கு என்ன விடயம் வினைத்திறனான முறையில் உதவியதோ – அதாவது இனவாதத்தைத் தூண்டி மக்களை உசுப்பேற்றுதல் – அந்த விடயத்தை மீண்டும் செயற்படுத்தவே இந்த அரசாங்கம் முனைகிறது என்பது இதன்மூலம் தெளிவாகின்றது. இந்த நடவடிக்கை எமது சமகால சமூகக் கட்டமைப்பில் நீண்டகாலத் தாக்கங்களை ஏற்படுத்தும். எனவே இது தொடர்வதற்கு அனுமதிக்கக் கூடாது.
ஆகவே, 2251/30ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற்றுக்கொண்டு இந்த செயலணியைக் கலைத்துவிடுமாறு நாம் ஜனாதிபதியிடம் கோருகின்றோம். சட்டத்தை உருவாக்குவதற்காக ஜனநாயக மற்றும் பிரதிநிதித்துவ செயல்முறைகளை மீட்டெடுத்து அவற்றை நிலைப்படுத்துமாறு நாம் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.