ஊதியம் பெறாத பராமரிப்புப் பணிகளை அங்கீகரித்தல், குறைத்தல் மற்றும் மறுபகிர்வு செய்தல் (ஆண்கள் மற்றும் சிறுவர்கள்) பராமரிப்புப் பணிகளில் பால்நிலைச் சமத்துவம் மற்றும் பகிரப்பட்ட பொறுப்புகள் பால்நிலை கற்றல் தொகுதி

ஊதியமில்லாப் பராமரிப்புப் பணிகளை அங்கீகரித்தல், குறைத்தல் மற்றும் மறுபகிர்வு செய்தல் ஆகியவற்றுக்கான பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பின் (றுஆஊ) பரிந்துரைகளுக்கு இணங்க, சிறுவர்கள் மற்றும் ஆண்களுக்கான இந்தப் பயிற்சிக் கையேடு உருவாக்கப்பட்டுள்ளது. அரசியல், சமூக மற்றும் பொருளாதாரத் துறைகள் முழுவதும் பால்நிலைச் சமத்துவத்தை நனவாக்குவதற்காகப் பணியாற்றுவதில் றுஆஊ-யின் அர்ப்பணிப்பை இது பிரதிபலிக்கிறது.

வீடுகளில் நிலவும் பால்நிலை அடிப்படையிலான சமூக நெறிகள் மற்றும் நடைமுறைகளின் அடிப்படையில், பால்நிலை மற்றும் பால் ரீதியான வேலைப் பிரிவினையானது, குடும்ப நலனுக்கான பொறுப்புகளைப் பெண்கள் மீது சுமத்துகிறது. வீட்டில் உள்ள அனைத்து ஊதியமில்லாப் பராமரிப்புப் பணிகளுக்கும் பெண்கள் பொறுப்பேற்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமையல், சுத்தம் செய்தல், துணி துவைத்தல், குழந்தைகளை வளர்த்தல், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிக் குடும்ப உறுப்பினர்களைப் பராமரித்தல் போன்றவை பெரும்பாலும் அதிக உழைப்பையும் நேரத்தையும் கோருபவையாகும். ஒரு பெண் ஊதியம் பெறும் வேலையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இந்த ஊதியமில்லாப் பராமரிப்பு ‘பொறுப்புகள்’ நிறைவேற்றப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறுவர்களும் ஆண்களும் இந்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுவதில்லை, மேலும் பெரும்பாலும் அவர்கள் அவற்றை மேற்கொள்வதில்லை, ஏனெனில் இவை சிறுமிகளின் அல்லது பெண்களின் வேலையாகக் கருதப்படுகின்றன. சமூக நெறிகளும் நடைமுறைகளும், சமூக, அரசியல் மற்றும் பொருளாதார அதிகாரத்தின் வெளிப்பாடுகளாக, ‘ஆண்மை’ குறித்து நிலவும் நெறிகளுக்கு ஏற்ப வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளை சிறுவர்கள் மற்றும் ஆண்கள் மீது சுமத்துகின்றன. இது, குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு வழிவகுக்கக்கூடும்.

இந்தப் பயிற்சித் தொகுதியானது, அர்த்தமுள்ள பால்நிலைச் சமத்துவத்தை ஊக்குவிப்பதற்காக, இல்லறத்திற்குள் உள்ள பால்நிலை அடிப்படையிலான வேலைப் பங்கீட்டைப் புரிந்துகொள்வதற்கும் மறுசீரமைப்பதற்கும் ஒரு கட்டமைப்பை வழங்குகிறது.

சமூகக் களங்கமின்றி, அன்றாடப் பராமரிப்புப் பணிகளில் சிறுவர்கள் மற்றும் ஆண்களின் ஈடுபாட்டை ஊக்குவிப்பதும் மேம்படுத்துவதும் எவ்வளவு முக்கியம் என்பதை இந்தப் பயிற்சித் தொகுதி விளக்குகிறது. பால் மற்றும் பால்நிலை அடையாளங்களைப் பொருட்படுத்தாமல் அனைத்து வீட்டு வேலைகளையும் பகிர்ந்து கொள்ளலாம் என்பதை வெளிக்காட்டும் வகையில், சமூக உறவுகளில் ஆக்கப்பூர்வமான மாற்றங்களைக் கொண்டுவர, ஆண்கள் மற்றும் சிறுவர்களின் திறன்கள் வலுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொகுதியைப் படிக்கவும்

Share the Post: