Thinakkural: தோட்டத் தொழிலாளர்களுக்கு நில உரிமை கட்டாயம்

Source: Thinakkural

சுய கௌரவத்துடனும், பேரம் பேசக்கூடிய ஆற்றலுடனும் மலையக தோட்டத் தொழிலாளர்கள் வாழ்வதற்கு அவர்களுக்கு நில உரிமை கட்டாயம் வழங்கப்பட வேண்டும். மலையகத்தில் அரச தோட்டங்கள் தனியாருக்கு விற்கப்படுகின்ற நிலையில் 150 வருட காலமாக பின்தங்கிய சமூகமாக வாழும் மலையக மக்களுக்கு அந்த காணிகளை வழங்க ஏன் நடவடிக்கை எடுக்க முடியாது? என்று மனித அபிவிருத்தி தாபனத்தின் திட்ட இணைப்பாளரும் பெண்கள் ஒத்துழைப்பு முன்னணியின் பொதுச் செயலாளருமான பொன்னையா லோகேஸ்வரி கேள்வி எழுப்பினார்.

அவரின் கருத்துக்கள் இங்கு பதிவாகின்றது.

கேள்வி:தோட்டத் தொழிலாளர் சம்பளப் போராட்டத்தில் மலையகப் பெண்களின் பங்களிப்பு எவ்வாறு உள்ளது?

பதில்:சம்பள உயர்வுப் போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமாக உள்ளது. குறிப்பாக எந்த தலைமைகள் இந்த போராட்டத்தில் ஈடுபடுகின்றார்களோ அந்த தலைமைகளை சார்ந்து பெண் தொழிலாளர்களும் பிரதேச சபைகளில் உள்ள பெண் உறுப்பினர்களும் போராட்டங்களில் காத்திரமான பங்களிப்பினை செய்து வருகின்றார்கள். பெருந்தோட்டத் துறையில் பெண்களின் பங்களிப்பு 50 வீதத்திற்கும் அதிகமாக உள்ளது. சந்தாப்பணம் செலுத்துவதிலும் பெண்கள் தான் அதிகமாக பங்களிக்கின்ற போதிலும் தொழிற்சங்க தலைவர்களாகவும் அரசியல் தலைவர்களாகவும் ஆண்கள் உள்ளபடியால் இந்த கட்சிகளிலோ அல்லது தொழிற்சங்கங்களிலோ இரண்டாம் நிலை தலைமைத்துவத்தைக் கூட பெண்களால் பெற முடிவதில்லை.

அவர்களின் பாத்திரம் தெளிவாக வெளி உலகத்திற்கு எடுத்துக் காட்டப்படவில்லை. எவ்வாறாயினும் மலையக மக்கள் அடிப்படையிலிருந்தே பின்தங்கிய சமூகமாக 1000 ரூபாவை கூட பெற முடியாத நிலையில் இருக்கின்றனர். 50 ரூபா சம்பளத்தைக் கூட்டினால் பதவி விலக நேரிடும் என்று கூறும் அளவுக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் ஏனைய சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் நடந்துகொண்டு 50 ரூபாவை பெற்றுக் கொடுப்பதற்கு இடையூறாக இருக்கின்றார்கள் என்றால் அவர்கள் மலையக மக்களின் வாழ்வாதாரத்துடன் சம்பந்தப்பட்ட இப்பிரச்சினையை ஓர் பாரதூரமான பிரச்சினையாகப் பார்க்கவில்லை என்று கருத வேண்டும்.

கேள்வி:பிரதேச சபைகளில் மலையகப் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் காரணமாக மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதா?

பதில்;சில சபைகளிலே பெண் உறுப்பினர்கள் முழு முயற்சியுடன் செயற்படுகின்றார்கள். அதற்கு அவர்களின் கல்வித் தகைமையும் மொழி ஆற்றலும் பங்களிக்கின்றது. ஆனாலும் சில கட்சிகள் 25 வீத கோட்டாவில் விடயங்களை அறிந்த தெளிவான சிந்தனையுள்ள பெண்களை அனுப்பியிருக்க வேண்டும்.

பிரதேச சபை என்ற கட்டமைப்பிலே எவ்வாறு தமது பிரச்சினைகளை முன்னெடுப்பது அந்த பிரச்சினைகளுக்கு தேவையான நிதி ஒதுக்கீடுகளை எப்படி செய்வது? என்பன முற்றிலும் புதிதான விடயம். அதற்கு அவர்களுக்கு பயிற்சிகள் தேவை. அரசியல் அமைப்பு விவகாரங்கள், மனித உரிமைகள், மாகாண மற்றும் உள்ளூராட்சி சபைக்கான அதிகாரங்கள் பற்றியும், பிரதேச சபைகளில் கிடைக்கும் வளங்களை எவ்வாறு எமது சமூகத்திற்கு பயன்படுத்துவது பற்றியும் இவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

வரவு செலவுத் திட்டத்தினை பிரதேச சபைகளில் சமர்ப்பிக்கும் போது அது பால்நிலை சமத்துவத்தைக் கொண்டதாக இருக்குமாயின் பெரும்பாலான பிரச்சினைகளைத் தவிர்த்துக் கொள்ள முடியும். பெண்களால் தீர்மானம் எடுக்க முடியவில்லை என்ற குறைபாடுகள் இவ்வாறான வரவு செலவுத் திட்டங்கள் வரும் போது நிவர்த்தி செய்யப்பட முடியும்.

நுவரெலியா மாவட்டத்தில் கிட்டத்தட்ட 30 மலையகப் பெண்கள் பிரதிநிதித்துவம் வகிக்கின்ற அதேவேளை ஏனைய மாவட்டங்களிலும் கணிசமானளவு பெண்கள் சென்றிருக்கின்றனர். இவர்கள் வெறுமனே அபிவிருத்தி பணிகளில் மாத்திரம் அவர்களுடைய செயற்பாடுகளை முடக்கிக் கொள்ளாது தங்களுடைய இருப்பை முன்னிலைப்படுத்தி தீர்மானம் எடுக்கும் நிலைக்கு வந்தால் தான் மாற்றங்கள் நிகழும்.

கேள்வி:நீண்ட காலமாக மலையகப் பெண்கள் எதிர்கொள்கின்ற சுகாதாரப் பிரச்சினைகள், கழிப்பறை வசதிகளின்மை தொடர்பில் தீர்வுகள் எவையும் எட்டப்பட்டுள்ளனவா?

பதில்:மலையகப் பெண்களின் வாழ்க்கைத்தரம் மிகவும் பின்தள்ளப்பட்ட நிலையில் இருப்பதற்குக் காரணம் தேசிய நீரோட்டத்துடன் மலையக மக்களின் சுகாதார விடயங்கள் இணைக்கப்படாமையாகும். பெண்கள் வேலை செய்யும் இடங்களுக்கு அருகாமையில் கழிப்பறைகள் இன்மையினால் மாதவிடாய் காலங்களில் பல பிரச்சினைகளை அவர்கள் எதிர்கொள்கின்றனர்.

மலையக தோட்டப்பகுதிகளில் தொடர்கின்ற சுகாதாரப் பிரச்சினைகளை மனித அபிவிருத்தி தாபனம் கடந்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளாக ஆய்வு செய்து ஒரு தீர்வினைக் காண்பதற்காக அதிகாரிகளுடனும் அரசியல் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடி வந்தது. தற்போது அது ஒரு முடிவுக்கு வரும் தறுவாயில் இருக்கின்றது. அரசாங்கத்தால் தோட்டப்புற சுகாதாரத்தை மேம்படுத்த பாராளுமன்ற குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் எமது செயற்பாட்டிற்கு கிடைத்த வெற்றி என்றே நாங்கள் இதனை கருதுகின்றோம். பெருந்தோட்டத்துறை சுகாதாரம் அரசின் பொறுப்பாக முழுமையாக மாறும் வரை நாங்கள் செயற்படுவோம்.

ஆய்வு அறிக்கைகளின் படி பெருந்தோட்டப்பகுதிகளில் 25 வீதமானவர்கள் சுகாதார வசதிகள் இல்லாமல் இருக்கின்றனர். அதேபோல் 35.9 சதவீத சிறுவர் சிறுமிகள் அதாவது 5 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் தேசிய மட்டத்துடன் ஒப்பிடுகையில் உடல் எடை குறைந்தவர்களாக உள்ளனர்.

5 வயதிற்குட்பட்ட 38.4 வீதமான சிறுவர் சிறுமியர் மற்றும் கர்ப்பிணித் தாய்மார் இரத்தச்சோகைப் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அத்துடன் தனிநபர் வறுமை விகிதம் மலையகத்தில் 10.9 சதவீதமாக இருக்கின்றது. நகர்ப்புறத்தில் இது 2.1 ஆகவும் கிராமப்புறத்தில் 7.6 ஆகவும் காணப்படுகின்றது. தோட்டத்துறையில் வீட்டில் குழந்தைப் பேறு 2.2 வீதமாகக் காணப்படுகின்றது.

நகர்ப்புறங்களில் இது பூச்சியமாகவும் கிராமப்புறங்களில் 0.5 வீதமாகக் காணப்படுகின்றது. குறிப்பாக 2.5 கிலோகிராம் தான் பிறக்கும் சிசுவின் சராசரி நிறையாக இருக்க வேண்டும். ஆனால் மலையகத்தில் காணப்படும் போஷாக்கின்மை காரணமாக மலையகத்தில் பிறக்கும் குழந்தைகள் இந்த சராசரி நிறையை விட குறைவாகவே காணப்படுகின்றனர். சில தோட்ட பிரதேசங்களுக்கு சரியான போக்குவரத்து வசதிகள் இன்மை காரணமாக தாய் சேய் உயிர் ஆபத்தும் காணப்படுகின்றது.

கேள்வி:மலையகப் பெண்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கட்டாய கருத்தடைகள் தற்போதும் தொடர்கின்றனவா?

பதில்:குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு முன்பு எல்லா மலையக தோட்டப் பிரதேசங்களிலும் கட்டாயக்கருத்தடை நடைபெற்றது. ஆனால் இவ்வாறான கட்டாய கருத்தடைகள் தற்போது நடைபெறுவதில்லை. ஏனெனில் சிவில் அமைப்புகளினதும், அரசியல் தலைமைகளினதும் தலையீட்டினால் இவ்விடயம் நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலப் பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டாய கருத்தடைகள் காரணமாக இன்று மலையகத்தில் முதலாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் மிகவும் குறைவாக இருக்கின்றனர். சுமார் 15 முதல் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வகுப்பிலே 30 தொடக்கம் 40 மாணவர்கள் இருப்பர். இப்பொழுது 15 20 மாணவர்களை காணக் கூடியதாக உள்ளது. இக் கட்டாய கருத்தடைகள் தொடர்பாகவோ, சட்டங்கள் தொடர்பாகவோ மலையகப் பெண்கள் தெளிவற்று இருந்தனர்.

கேள்வி:தோட்டத்தொழிலாளர்களுக்கு 7 பேர்ச்சஸ் காணி வழங்கப்படுவது குறித்து உங்களது நிலைப்பாடு என்ன?

பதில்:தோட்ட லயன்களில் 50 முதல் 60 சதவீதமான மக்கள் இன்னும்; வாழ்ந்து வரும் நிலையில் அரச தோட்டங்கள் தனியாருக்கும் சர்வதேச நிறுவனங்களுக்கும் விற்கப்படும் போது 25 ஏக்கர் 50 ஏக்கர் என்று காணிகளைப் பிரித்து வழங்கப்படுகின்றது. ஆனால் எமது மக்களுக்கு வெறும் 7 பேர்ச்சஸ் காணி தான் வழங்கப்படுகின்றது.

ஒவ்வொரு பெருந்தோட்ட குடும்பத்திற்கும் 20 பேர்ச்சஸ் நிலமாவது வாழ்வதற்கு தேவை. மலையகத்தில் தரிசு நிலமாக 74 ஆயிரம் ஹெக்டெயர் நிலம் காணப்படுகின்றது. ஏறக்குறைய 200,000 எண்ணிக்கையான குடும்பங்கள் தோட்டங்களில் வசிக்கின்ற நிலையில் இந்த குடும்பங்களுக்கு 20 பேர்ச்சஸ் என்ற ரீதியில் காணிகள் வழங்கப்பட்டாலும் அதற்கு 10,117 ஹெக்டெயர் நிலமே தேவை. இவ்வாறு வழங்கினாலும் 63,883 ஹெக்டெயர் நிலம் அரசாங்கத்திற்கு எஞ்சுகின்றது. மலையக மக்கள் குரல் அற்றவர்களாக பின்தங்கிய சமூகமாக வாழ்வதற்கு காரணம் அவர்களுக்கு நில உரிமை இல்லாததே. நாடற்றவர்களாக குரல் அற்றவர்களாக பலம் அற்றவர்களாக அவர்கள் பல காலம் வாழ்ந்தது போதும். இனியாவது அரசாங்கம் இவ்விடயம் குறித்து கவனம் செலுத்த வேண்டும்.