Thinakkural: தோட்டப்பகுதி பெண்களுக்கான ஏனைய தொழில் உரிமைகள் பற்றி கவனமெடுக்கப்படுவதில்லை

Source: Thinakkural

கூட்டு ஒப்பந்தத்தில் சம்பள உயர்வு பற்றி பேசப்படுகின்ற போதிலும் பெண்களுக்கான ஏனைய தொழில் உரிமைகள் பற்றி கவனம் எடுக்கப்படுவதில்லை என்று உழைக்கும் பெண்கள் முன்னணியின்; பொதுச்செயலாளரும் சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் பெண்கள் தொடர்பான திட்ட முகாமையாளருமான யோகேஷ்வரி கிருஷ்ணன் தெரிவித்தார். தோட்டப்பகுதிகளில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை உரிய இடங்களில் முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் அவர்களுக்கு வழங்கப்படுவது இல்லை. தகுதியான பெண்கள் இருந்தாலும் அவர்களின் திறமைகள் தொழிலாளர்களின் அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படாத நிலைமையே காணப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவரது கருத்துக்கள் இங்கு நேர்காணலாக பதிவாகின்றது.

கேள்வி:மலையக மக்களின் சம்பள உயர்வுப் போராட்டம் வெற்றி காணாமல் ஒரே இடத்தில் ஸ்தம்பிதமடைந்துள்ளதன் காரணம் என்ன?

பதில்:பிரதான தொழிற்சங்கம் ஒன்று ஒரு குறிப்பிட்ட தொகையை சம்பள உயர்வு கோரிக்கையாக முன்வைக்கும் போது எல்லா தொழிற்சங்கங்களும் அந்த கோரிக்கைக்கு பின்னால் அணி திரளும் போக்கு தான் காணப்படுகின்றது. ஆனால் இன்றுள்ள வாழ்க்கைச் செலவினைக் கவனத்திற் கொண்டு தோட்டத்தொழிலாளர்களுக்கு எவ்வளவு சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் விஞ்ஞானபூர்வமான கோரிக்கை முன்வைக்கப்படுவதில்லை.

இதனை அவதானித்த நாம் சில பொருளாதார வல்லுனர்களுடன் இணைந்து இவ்விடயம் தொடர்பில் ஒரு ஆய்வை செய்துள்ளோம். அதன்படி தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆகக் குறைந்தது 1108 ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும். இன்று உலக அளவில்; ஒரு தொழிலாளிக்கு வாழ்வதற்கான சம்பளம் வழங்கப்பட வேண்டுமாக இருந்தால் அதனை எப்படி கணிப்பீடு செய்யப்பட வேண்டும் என்ற நடைமுறைகளை பின்பற்றி தான் இந்த தொகை கணிப்பிடப்பட்டுள்ளது.

நாங்கள் இந்த விடயத்தினை எல்லா தொழிற்சங்கங்களுக்கும், தேயிலைத்தோட்ட முகாமைத்துவங்களுக்கும், சிவில் சமூகங்கள் மற்றும் கொள்கை வகுப்போர் உட்பட அனைவருக்கும் ஆவணமாக வழங்கியிருந்தோம். இந்த ஆய்வின் அடிப்படையில் நியாயமான சம்பள அதிகரிப்பு கோரிக்கையை முன்வைக்குமாறு அவர்களை கேட்டிருந்தோம்.
கூட்டு ஒப்பந்தத்தின் படி சம்பள உயர்வுப் பேச்சுவார்த்தைகளுக்கு தொழிற்சங்கங்கப் பிரதிநிதிகள் செல்லும் போது எந்தவிதமான விஞ்ஞானபூர்வமான ஆவணங்களும், தரவுகளும் இல்லாமல் தான் செல்கின்றனர்.

ஆயிரம் ரூபா சம்பளத்தினை இந்த இந்த காரணங்களுக்காக தான் கேட்கின்றோம் என்று நியாயபூர்வமான ஆதாரங்களை முன்வைக்க முடியாத நிலையில் அவர்கள் உள்ளனர். ஆனால் முதலாளிமார் சம்மேளனத்தினைப் பார்த்தால் அவர்கள் உலக சந்தையில் தேயிலை விலை நிலவரங்கள், ஏற்றுமதி இறக்குமதி தரவுகள் மற்றும் புள்ளிவிபரங்களுடன் தான் பேச்சுவார்த்தைக்கு வந்து ஆதாரபூர்வமாக விடயங்களை முன்வைத்து எங்களால் இவ்வளவு தான் வழங்க முடியும் என்கின்றனர். தொழிற்சங்கங்கள் நியாயபூர்வமான ஆதாரங்கள் எதுவுமின்றி வெறுமனே வாய்ப்பேச்சில் ஈடுபடுவதால் அங்கு தொழிற்சங்கங்களின் கருத்துக்கள் எடுபடாத நிலைமையே உள்ளது.

கேள்வி:தொழிற்சங்கங்கள் இவ்விடயத்தில் அக்கறை செலுத்தாமைக்கான காரணம் என்ன?

பதில்:தொழிலாளர்களுக்கு வாழ்வதற்கான சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தொழிற்சங்கங்கள் காத்திரமான விதத்தில் முதலாளிமார் சம்மேளனத்திடம் முன்வைத்து பேரம் பேசல் வேண்டும். ஏனெனில் இன்று எமது தொழிலாளர்கள் அனுபவிக்கும் அனைத்து தொழில் உரிமைகளும் தொழிற்சங்கங்களின் கடந்த கால போராட்டங்களின் விளைவாகவே கிடைத்தவையாகும்.

எனவே வென்றெடுத்த உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளவும் பெறப்பட வேண்டிய உரிமைகளுக்காக குரல் கொடுக்கவும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். இன்று இந்நாட்டின் தேசிய வருமானத்தினை எடுத்துக் கொண்டால் 13 வீத நிரந்தர வருமானத்தினைப் பெற்றுக்கொடுக்கக் கூடிய ஒரு தொழிற்துறையாக தேயிலை உற்பத்தி உள்ளது.

இந்த தொழிலாளர்களின் சம்பளம், கௌரவமான தொழிற் சூழல் மற்றும் தேயிலை தொழிற்துறைக்கு சாதகமான விடயங்களை சரியாக தக்க வைத்துக்கொண்டால் தான் தேயிலை உற்பத்தியை நீடிக்க முடியும். இன்று இலங்கை அபிவிருத்தி அடைந்துகொண்டு செல்ல அடிப்படை காரணம் தேயிலை உற்பத்தியாகும். ஆனால் இந்த மக்களின் வாழ்வாதாரம் அவர்களின் முன்னேற்றம் எப்படி இருக்கின்றது என்று பார்த்தால் அது திருப்திகரமானதாக இல்லை.

கேள்வி:மலையக தோட்டப்பகுதிகளில் பெண்கள் அதிகமாக பங்களித்து வரும் நிலையில் அவர்களின் தொழில் உரிமைகள் எவ்வாறு உள்ளன?

பதில்:தேயிலைத் தோட்ட தொழிலாளர்களில் 50 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் பெண்களாவர். இன்னும் தேயிலைப் பறிக்கும் பெண்கள் பயன்படுத்தும் கூடையின் பாரம் அவர்களின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கக் கூடியதாகவே உள்ளது. இவ்விடயம் மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட போதிலும் அந்த விடயம் மாற்றப்படவில்லை. ஓய்வாக அமர்ந்து சாப்பிடுவதற்கு அவர்களுக்கு ஓய்வு அறைகள் இல்லை.

வீட்டினை தக்க வைத்துக் கொள்ளவே அவர்கள் இந்த வேலையை செய்கின்றனர். அதிகமாக பெண்கள் வேலை செய்கின்ற நிலையில் அவர்களுடைய சுகாதாரம் இதர சேமநலன்கள் குறித்து கம்பனிகளும், அரச நிர்வாகங்களும் கவனம் செலுத்த வேண்டும். ஆனால் இவற்றில் திருப்திகரமான மாற்றங்கள் இன்னும் வரவில்லை. எல்லா தொழிற்துறையிலும் உள்ள தொழிலாளர்களுக்கும் கௌரவமான தொழில் சூழல், சீருடைகள் வழங்கப்பட வேண்டும் என்று சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் கூறியுள்ளது.

ஆனால் இவ்விடயம் மலையக பெண் தொழிலாளர்கள் விடயத்தில் முற்றாக மறுக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்களில் பெண்கள் தலைவிகளாக இருக்கின்றனர். பெண் கங்கானிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனினும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படல் வேண்டும். தலைமை மேற்பார்வையாளராக ஒரு ஆணை நியமிக்கும் போது கல்வி அறிவு மற்றும் இதர தகுதிகள் பற்றி கருத்திற் கொள்ளப்படுவதில்லை.

ஆனால் பெண்களை நியமிக்கும் போது மட்டும் கல்வி தாரதரம் மற்றும் இதர நிபந்தனைகள் விதிக்கப்பட்டு அவர்களைத் தட்டிக் கழிக்கப் பார்க்கின்றனர். கட்சிக் கூட்டங்கள் நடத்தும் போதும் தேநீர் தயாரித்தல், இடத்தை சுத்தப்படுத்தல், மக்களை ஆட்திரட்டல் போன்ற மரபுரீதியான வேலைகளே அவர்களுக்கு வழங்கப்படுவதனைக் காணலாம்.

தற்போது மலையகப் பெண்கள் அதிகளவில் வெளிநாட்டில் பணிப்பெண்களாக வேலை செய்ய செல்லும் போக்கு அதிகரித்துள்ளது. விழிப்புணர்வு இன்மையினால் பதிவு செய்யப்படாத வெளிநாட்டு தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்களை நாடிச் சென்று அவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

கேள்வி:பின்தங்கிய நிலையில் இருக்கும் மலையக தோட்டத்தொழிலாளர்களின் வாழ்வில் மாற்றங்கள் ஏதும் நிகழ்ந்துள்ளதா?

பதில்:எமது நிறுவகம் 1990 ஆம் ஆண்டு முதல் மலையக மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை வென்றெடுப்பதற்கு ஏற்புரை, பரப்புரை உட்பட பலவிதமான வேலைத்திட்டங்களை பல மட்டங்களிலும் முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் தொழிலாளர்கள் இன்று வீதியில் இறங்கி போராடுவதே ஒரு பெரிய மாற்றம் தான். சம்பள உயர்வுக் கோரிக்கையை முன்வைத்து இளைஞர்கள் யுவதிகள் ஒன்று சேர்ந்து ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை அவர்களாகவே இம்முறை நடத்தியிருந்தனர்.

தொழிற்சங்க பேதங்களின்றி பொதுவான நோக்கோடு இந்த ஆர்ப்பாட்டங்கள் நடந்தமை வரவேற்கத்தக்கதாகும்.

ஆரம்பத்தில் இவ்வாறான ஒரு நிலைமை இருக்கவில்லை. சம்பள உயர்வு விடயத்தில் தொழிற்சங்கங்களை மட்டும் நம்பிப் பயனில்லை என்று மக்கள் கருதுகின்றனர். கல்வி ரீதியிலான முன்னேற்றங்கள் ஓரளவு உள்ளன. ஆனால் வாழ்வாதாரம் சம்பந்தமான விடயங்களில் தான் திருப்திகரமான மாற்றம் வரவில்லை. இதற்கு காரணம் நில உரிமையும் வீட்டு உரிமையும் அவர்களுக்கு இன்மையாகும். இதனால் மேலதிகமான வருமானத்தை அவர்களினால் பெற்று வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த முடியவில்லை.

கேள்வி:மலையகத்தைச் சேர்ந்த ஏராளமான இளைஞர் யுவதிகள் மலையகப்பகுதிகளிலிருந்து வெளியேறி தனியார் நிறுவனங்களிலும், கடைகளிலும் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் எவ்வாறான தொழில் உரிமைகளை அனுபவிக்கின்றனர்?

பதில்:சம்பளம் குறைவு, சமூகத்தில் அங்கீகாரம் இன்மை, தோட்டத்தொழிலாளர்களாக இருப்பது கௌரவமில்லை என்று இளைஞர் யுவதிகள் கருதுகின்றனர். தொழில் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வின்மை காரணமாக தொழில் உரிமைகள் மீதான அக்கறையற்றும் உள்ளனர். கடை காரியாலய பணிமனைச் சட்டம் தனியார் துறையினருக்கு இருக்கின்றது.

அதில் எல்லா உரிமைகளும் உத்தரவாதம் செய்யப்பட்டிருந்தாலும் கூட தொழில் தருனர்கள் இந்த உரிமைகளை வழங்குகின்றார்கள் இல்லை. எனவே அவர்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை எங்கள் தொழிற்சங்கத்தில் இணைத்து அவர்களுக்கு விழிப்புணர்வு செய்வதனூடாக தற்போது நிறைய பேருக்கு ஊழியர் சேமலாப நிதி ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதி என்பன கிடைத்துள்ளன.

கேள்வி:மலையகத்தில் மக்களின் வாழ்க்கைத்தரத்தில் மாற்றங்களை ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன?

பதில்:ஆசிரியர் பற்றாக்குறை நீக்கப்பட வேண்டும். அனைத்து பாடசாலைகளுக்கும் வளங்கள் சமமாகப் பகிரப்பட வேண்டும். இளைஞர் யுவதிகள் மத்தியில் திறன் தேர்ச்சியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வியில் சிறப்புற்றால் எம்மை யாரும் அடிமைப்படுத்த முடியாது. அத்துடன் மூன்று மொழியிலும் தேர்ச்சி அவசியம்.

மேலும் பல பாடசாலைகளில் குடிநீர் பிரச்சினையும் கழிப்பறை பிரச்சினையும் உள்ளன. இது பற்றி யாரும் கவனம் செலுத்துவதில்லை. அரச நிர்வாகத்தின் கீழ் உள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதாந்தம் 5 முதல் % ஆயிரம் ரூபா வரை சம்பளம் பெறும் குடும்பங்களும் உள்ளன. அந்தளவு சம்பளத்தில் அவர்கள் எப்படி வாழ முடியும்? இவை அனைத்தையும் ஆழமாகப் பார்க்க வேண்டும்.

அதேநேரம் அரசாங்கமும் கொள்கை ரீதியான விடயங்களை முன்னெடுக்க வேண்டும். எமது மக்கள் பிரதிநிதிகள் பிறரில் சார்ந்திருந்து உரிமைகளைப் பெற்றுக் கொள்ள நினைக்கக் கூடாது. அனைத்து வீடமைப்பு திட்டங்களிலும் வீட்டுரிமைப் பத்திரங்களை உரியவர்களுக்கு வழங்க வேண்டும். ஆனால் வீடமைப்புத் திட்டங்கள் வழங்கப்பட்ட வேளை வீட்டுக்கான கடனை மீள் செலுத்தியவர்களுக்கும் வீட்டுரிமை பத்திரம் வழங்கப்படவில்லை. இதற்கான காரணத்தை ஆராய்ந்துப் பார்த்து அதனை கொள்கை வகுப்பாளர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றோம்.