Thinakkural: நிலைமாறுகால நீதி செயற்பாட்டில் பெண்கள் உள்வாங்கப்பட வேண்டும்; இந்துமதி ஹரிஹரதாமோதரன் நேர்காணல்

Source: Thinakkural

காணாமற்போனோர் மற்றும் காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் அவர்களது உறவுகளுக்கான நீதியினைப் பெற்றுக் கொள்வதிலும், தமது வாழ்வாதார முயற்சிகளினை மேற்கொள்வதற்கும் உரிய எற்பாடுகளின்றிப் பலத்த சவால்களினை நாளாந்தம் எதிர்கொண்டு வரும் நிலையில் வடகிழக்கின் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கம் கட்டாயம் விசேட ஏற்பாடொன்றினை ஏற்படுத்திக் கொடுக்க முயலவேண்டும்.

அதனூடாகவே நலிவுற்ற அப்பெண்களின் குடும்பங்கள் சமூக பொருளாதார மீட்சியினைப் பெற முடியுமே தவிர பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான கொள்கையோ அதனூடாக தயாரிக்கப்பட்ட தேசிய செயற்றிட்ட வரைபினை ஆவண வடிவில் வைத்திருப்பதோ இவர்களது வாழ்வில் சாதகமான மாற்றத்தினை உடனடியாக ஏற்படுத்தப் போவதில்லை என நிலைமாறுகால நீதிக்காக வடக்கு கிழக்கு மட்டுமன்றி தேசிய ரீதியாகவும் செயற்பட்டு வரும் இந்துமதி ஹரிஹரதாமோதரன் சுட்டிக் காட்டினார்.

இவர் நிலைமாறுகால நீதிக்கான தேசிய பெண்கள் பொதுத்தளத்தின் தேசிய இணைப்பாளராகவும், சிவில் சமூக செயற்பாட்டாளராகவும் விழுது நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரியாகவும் கடமையாற்றி வருகின்றார்.

அவரின் குரல் நேர்காணலாக இங்கு பதிவாகின்றது.

கேள்வி: நிலைமாறுகால நீதிச் செயன்முறையில் பெண்கள் ஏன் உள்வாங்கப்பட வேண்டும்?

பதில்: போரின்போது அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களாவர். மனித உரிமை மீறல்களினால் எத்தனையோ பெண்கள் தமது தந்தையை, கணவனை சகோதரனை இழந்து தத்தளிக்கின்றனர். சொத்துக்கள் மற்றும் வாழ்வாதாரத்துக்கான முதலீடுகளினை இழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்களின் சமூக, பொருளாதார அரசியற் பலவீனத்தன்மை அவர்களுக்கான நிலைமாறுகால நீதிச் செயன்முறையில் பிரத்தியேகப் பொறிமுறைகளை வடிவமைக்க வேண்டிய தேவையினையும், நடைமுறைப்படுத்தலினையும் உணர்த்துகின்றது.

இதனால் பாதிப்புற்ற தரப்பினராக அனைவரும் ஒன்றிணைந்து நிலைமாறுகால நீதிச் செயன்முறைகளில் பெண்களின் வகிபாகம் கட்டாயமாக்கப்பட வேண்டுமென்று குரல் கொடுத்து வருகின்றோம். மாவட்ட ரீதியாகப் பெண்களது வலையமைப்புக்களினைக் குரல் கொடுக்கும் விதத்தில் அணிதிரட்டி முன்னரைப் போன்று பெண்களுடன் பெயரளவில் கலந்தாலோசனைகளை மேற்கொண்டு விட்டு தேசிய கொள்கைகளை வடிவமைப்பதற்கோ அரசின் நிகழ்ச்சி நிரல்களில் பெண்களது ஆலோசனைகள் புறந்தள்ளப்படுவதற்கோ இடமளிக்காத விதத்தில் ஒவ்வொரு விடயத்திலும் பெண்களின் பங்கேற்பினையும் பங்களிப்பினையும் உறுதிப்படுத்தும் விதத்தில் அவர்களை வழிகாட்டி வருகின்றோம்.

இன்று பெண்கள் நிலைமாறுகால நீதிக்காக தங்களது குரல்களினைத் தயக்கமின்றி தெரிவிக்கக் கூடிய வகையில் வலுப்படுத்தப்பட்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்நிலைமை பரந்தளவில் இடம்பெறுமாயின் பாதிப்புற்ற பெண்கள் நிலைமாறுகால நீதிச் செயன்முறையில் பாரியதொரு சக்தியாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வர் எனலாம்.

கேள்வி: நீதியை வழங்கும் செயன்முறையில் அண்மைக்காலமாக நீங்கள் அவதானிக்கும் குறைபாடுகள் எவை?

பதில்: அரசாங்கத்தின் உறுதிமொழியாக முன்வைக்கப்பட்ட நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகள் இதுவரையில் எவ்வளவு தூரம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்று கேட்டால் இன்னும் ஆரம்பிக்கப்படவே இல்லை என்று தான் கூற முடியும். காணாமற்போனோர் அலுவலகம் செயற்பட்டு வரும் நிலையில் இன்று வரை எத்தனை பேர் காணாமற்போயுள்ளனர் என்ற விபரங்கள் அவர்களினால் வெளியிடப்படவில்லை.

தகவல்கள் தான் எப்பொழுதும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை பற்றிய எந்தவோர் ஆதாரங்களும் அரசாலோ அல்லது ஆணைக்குழுக்களாலோ வெளியிடப்படாத நிலையில் நாம் மக்களுக்கு எவ்வாறான உறுதிப்பாட்டினைக் கூற முடியும்? ஏற்கனவே பாதிக்கப்பட்ட மக்களிடம் நாம் திரும்பத் திரும்பச் சென்று தகவல்களை அறிவதும் தரவுகளினைத் திரட்டிக் கொள்வதனாலும் என்ன பயன்? நிலைமாறுகால நீதிச் செயன்முறைகளின் பொறிமுறைகளிலொன்று உண்மையைக் கண்டறிவதற்கான உரிமையுமாகும்.

காணாமற்போனோருக்கான அலுவலகம் மூலமாக எங்களது மக்கள் இதுவரையில் எத்தனை பேர் காணாமலாக்கப்பட்டுள்ளனர் என்ற விபரத்தினையாவது அறியலாம் என்றும் அதனூடாகப் பாதிக்கப்பட்ட மக்களது விபரங்கள் அரசிடம் கையளிக்கப்பட்டு தாமதமின்றி உண்மைகள் வெளிக்கொணரப்பட முடியும் என்றும் நம்பப்பட்டது.

ஆனாலும் இன்றுவரை அலுவலகம் இயங்கினாலும் அதன் நகர்வும் பூச்சியம் விளைவும் பூச்சியம் என்றே கருத வேண்டியுள்ளது.

அதேபோன்று போரில் கணவரை இழந்த எண்பத்தொன்பதாயிரம் பெண்கள் வடகிழக்கில் உள்ளனர் என்று சொல்லப்பட்டாலும் இந்த எண்ணிக்கை இதனை விட அதிகமாக இருக்கும் என்றே பெண்கள் கூறுகின்றனர்.

இந்தப் பெண்களுக்கான திட்டங்களும் உரிய முறையில் சென்றடையவில்லை. தகவல்கள் இல்லாமல் எவ்வாறு அவர்கள் உரியவர்களுக்கான சேவைகளை வழங்கமுடியும்?

அரசாங்கம் இத்தனை காலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகளோ அவர்களுக்கான திட்டங்களையோ முறைப்படுத்தி ஒழுங்கான முறையில் அமுல்படுத்தாதன் விளைவினால் தான் இன்னலுற்ற பெண்கள் நுண்கடன் நோக்கித் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் குடும்பங்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனவே தவிர அவர்களால் பிரச்சினைகளிலிருந்து மீண்டு வர முடியவில்லை.

போருக்குப் பின் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் போராளிகளின் பிரச்சினை மிக முக்கியமானதாகும். பொதுவாக மாற்றுத் திறனாளிகள் என்றவுடன் பார்வைப் புலனற்ற, நடக்கவியலாத, செவிப்புலனற்ற மற்றும் வாய் பேச முடியாதவர்கள் என்று குறிப்பிட்ட ஒரு வரையறைக்குள்தான் பார்த்திருக்கின்றோம்.

ஆனால் வன்னி மாவட்டங்களில் போரினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டு வெளிப்படையாக மேலே குறிப்பிடப்பட்ட அடையாளங்களின்றி உயிராபத்துடன் பலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எந்தவிதமான தொழிலினை மேற்கொள்ளவும், வாழ்வாதார முயற்சிகளில் ஈடுபடவும் இயலாதவர்களாகவே அவர்கள் உள்ளனர். அவர்களை எந்த வகைப்பாட்டுக்குள் உள்ளடக்குவது, அவர்களுக்கான சேவைகளினை எவ்வாறு அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்வது என்பதே இப்போது எங்கள் முன்னாலுள்ள சவால்.

கேள்வி: காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு நீதி கிடைப்பதில் நிலவும் தாமத நிலை குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்: காணாமலாக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் எத்தனையோ பேர் ஏக்கத்துடனும் எதிர்பார்ப்புடனும் தமது உறவுகளை எண்ணி உயிரை விடும் நிலைமை அதிகரித்துக் கொண்டே செல்கின்ற போதிலும் அதற்காக அரசு உடனடிக் கரிசனை கொண்டு செயற்பட முயற்சிக்கவே இல்லை.

தேசிய வரவுசெலவுத் திட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக ஆறாயிரம் ரூபா வழங்கப்படுமெனக் கூறப்பட்டாலும் இன்று வரை அப்பணம் வழங்கப்படவில்லை. அதனைப் பத்தாயிரமாக அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுமெனக் கூறப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் சரியான தரவுகள் இல்லாத நிலையில் இப்பிரச்சினைகளுக்கான தீர்வுகளினை எட்டுவதில் இன்னும் காலத்தினை நீட்டடிப்புச் செய்யும் முயற்சியே தொடரும் போலுள்ளது.

வடமாகாணத்தினைப் பொறுத்தமட்டில் சொத்துக்கள் தொடர்பாக தேசவழமைச் சட்டத்தின் கீழ் நாம் கட்டுப்பட வேண்டியுள்ளதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிலுள்ள பெண்கள் தமது நிலங்களிலே ஓர் வியாபார முயற்சியினை மேற்கொள்வதற்கோ அல்லது அவற்றினை முதலீடாக வைத்துத் தொழில் முயற்சியொன்றினைத் தொடர்வதற்கோ கட்டாயம் கணவனது ஒப்பம் பெறப்பட வேண்டும்.

அவர்கள் எங்குள்ளனர் என்றே தெரியாத நிலையில் தமது சொத்துக்களைக் கையாள்வதற்கோ அல்லது அவர்களது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்காக அவற்றினை வைத்து கடன் வசதிகளைப் பெறுவதற்கோ வழியின்றி அவர்கள் தடுமாறுகின்றனர்.

கேள்வி: நிலைமாறுகால நீதி தொடர்பில் பங்குதாரர்களின் பங்களிப்பு எவ்வாறு உள்ளது?

பதில்: பங்குதாரர்களை நேரடியாக மக்களுடன் தொடர்புபடுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவு அளித்து மக்கள் தங்களுடைய பிரச்சினைகளை நேரடியாக உரிய தரப்பினருடன் சென்று நேரடியாகப் பகிர்ந்து கொள்ளும் விதத்தில் அமைச்சர்களையோ, பாராளுமன்ற உறுப்பினர்களையோ அல்லது ஆணைக்குழுக்களையோ அணுகுவதற்கு வழிகாட்டி வருகின்றோம்.

மக்கள் உரிய தரப்பினரை அணுகுவதனால் மக்கள் பிரதிநிதிகள் அவர்களது வேண்டுகோள்கள் மற்றும் சிபாரிசுகளைத் தாமதமின்றி பாராளுமன்றத்தில் முன்வைக்க முடிகின்றது. அதுமட்டுமல்ல மக்களுடனான சந்திப்புக்களுக்கும் இந்த மக்கள் பிரதிநிதிகள் சென்று அவர்களது பிரச்சினைகளை செவிமடுக்கின்றனர்.

குறிப்பாக சமூக பாதுகாப்பு, வாழ்வாதாரம், காணிப்பிரச்சினை, தடுப்புக்காவலில் உள்ளவர்களின் பிரச்சினை, காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சினைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் போராளிகள் பிரச்சினை என பற்பல விடயங்கள் தொடர்பாகப் பாராளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் மக்களது சிபாரிசுகளினைக் குறிப்பிட்டுள்ளனர்.

மக்கள் கொடுத்த சான்றுகளையும் பாராளுமன்ற அமர்வில் சபைக்குச் சமர்ப்பித்துள்ளனர். உண்மையில் இத்தகைய விடயங்கள் மக்களுக்கு ஒரு நம்பிக்கையைத் தருகின்றது. பாராளுமன்ற உபகுழுக் கூட்டங்களுக்கு பெண்களை அழைத்துச் சென்று இவ்விடயங்களை நேரடியாகப் பேச வைப்பது அவர்களுக்கு வாய்ப்பாக அமைகின்றது.

கேள்வி: போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் தகவல் அறியும் சட்டத்தினை தங்கள் நலன்கள் சார்ந்து எவ்வாறு பயன்படுத்துகின்றனர்?

பதில்: காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் அவர்கள் சார்ந்த விபரங்களைத் தெரிந்து கொள்வதற்கும் காணி சார்ந்த விடயங்களைப் பெறவும் வாழ்வாதாரங்கள் பற்றிய விபரங்களினைப் பெறவும் இச் சட்டத்தினைப் பெண்கள் பயன்படுத்துகின்றனர். தாம் பெற்ற விபரங்களைத் தங்களது மாவட்டக் குழுக்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர்.

அதுமட்டுமன்றி மேலதிக தெளிவுகள் தேவைப்படின் தெளிவுபடுத்தக் கூடிய நபரை அழைத்துக் கலந்துரையாடுகின்றனர். தகவல் அறியும் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து நேரடியாக உரையாடுவதனால் பலருக்கு வீட்டுத் திட்டங்கள் கிடைத்துள்ளன. இதனால் வடக்கு கிழக்கில் பல குடும்பங்கள் நன்மைகள் பெற்றுள்ளன. கடந்த ஏப்ரல் மாதத்தில் யாழ்ப்பாணத்தில் காணாமற்போன 115 பேரின் விபரங்களைத் தகவல் அறியும் விண்ணப்பங்கள் மூலம் பெண்கள் பெற்றுக் கொண்டு அந்த விபரங்களை காணாமற்போனோர் அலுவலகத்திற்கும் வழங்கியிருந்தனர்.