பெண்கள் மற்றும் அவர்களுக்கான நீதி தொடர்பாக இலங்கையில் இடம்பெற்ற அண்மைக்கால சம்பவங்கள் பற்றிய பெண்கள் உரிமைகள் செயற்பாட்டாளர்களின் பதிலிறுப்பு

09 நவம்பர் 2019

பெண்கள் உரிமைகள் செயற்பாட்டாளர்களாக, பெண்ணிலைவாத செயற்பாட்டாளர்களாக மற்றும் கல்வியாளர்களாக நாங்கள், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் தொடர்பான விடயங்களில் ஈடுபட்டு வருகின்றோம். அந்த அடிப்படையில் இலங்கையில் நாங்கள் முகங்கொடுக்கின்ற முக்கியமான இரு விடயங்கள் பற்றிய எமது தொடர்ச்சியான கரிசனையை வெளிப்படுத்த விரும்புகிறோம்: அவை பெண்களுக்கு எதிராகவும், விளிம்புநிலைக்குள்ளாக்கப்பட்ட குழுக்கள், நபர்களுக்கு எதிராகவும் புரியப்பட்ட பாரதூரமான வன்முறையான நடவடிக்கைகளுக்கு எதிர்வினையாற்றாத நீதித்துறையின் தோல்வி மற்றும் நீதி வழங்கப்பட்டாலும் நீதி முறைமையினைத் தரங்குறைத்து, நெறிபிறழச் செய்யப்படுகின்ற உயர்மட்ட தலையீடுகள் ஆகியனவாகும்.

எமது நாட்டின் நீதி முறைமை அடிக்கடி பெண்களைத் தோல்வியுறச் செய்கிறது. பெண்களும், அவர்களது குடும்பங்களும் சட்டவாட்சியின் மீதும், வன்முறையினால் பாதப்புக்கு உள்ளாக்கப்பட்ட பிரசைகளுக்கு நீதியை வழங்கக்கூடிய சட்ட முறைமையின் தகைமையின் மீதும் நம்பிக்கை இழக்கின்றனர்.

எவ்வாறாயினும் அண்மைக்கால சில தீர்ப்புகள் முன்னொருபோதும் இல்லாதவாறு பெண்களுக்கு எதிரான வன்முறையான நடவடிக்கைகளுக்குப் பொறுப்புக் கூறுவதிலிருந்தும் குற்றமிழைத்தவர்களைக் காப்பாற்றியுள்ளன. இவற்றுக்கு உதாரணமாக விசுவமடு பாலியல் வன்கொடுமை வழக்கு, றோயல் பார்க் கொலை வழக்கு மற்றும் வண.கலபொட அத்த ஞானசாரவிற்கு எதிரான வழக்கு என்பவற்றைக் கூறலாம்.

விசுவமடு வழக்கு

கிளிநொச்சி, விசுவமடுவில் வைத்துத் தமிழ்ப் பெண்ணொருவரைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய குற்றத்திற்காக 2015இல் தீர்ப்பளிக்கப்பட்ட இராணுவத்தினரை விடுதலை செய்திருக்கின்றமை தொடர்பாக நாம் எமது அதிருப்தியை வெளிப்படுத்த விரும்புகிறோம். 2010ஆம் ஆண்டு விசுவமடுவில்(கிளிநொச்சி) கூட்டுப் பாலியல் வன்கொடுமை புரிந்ததாகத் தண்டனை வழங்கப்பட்ட இலங்கை இராணுவத்தினர், மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டதாக அக்டோபர் 10, 11 ஆகிய தினங்களில் தஐலண்ட் (The Island) மற்றும் சிலோன் டுடே (Ceylon Today ) பத்திரிகைகளில் செய்தி வெளியாகி இருந்தது. நான்கு இராணுவத்தினருக்கு 25 வருட சிறைத்தண்டனை (four soldiers were sentenced to 25 years imprisonment. ) வழங்கப்பட்டதொரு மிகஅரிதான தீர்ப்பை இவ்வழக்குக் கொண்டிருந்தது. இந்த நேரத்தில் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டவருடனும், அவரது குடும்பத்தினருடனும் நாமும் இருக்கிறோம் என்ற ஒருங்கிணைவைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

குற்றத் தீர்ப்பளிக்கப்படும் காலகட்டத்தில், ஐ.நா அலுவலகத்தின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் வெளியிட்ட அறிக்கையில் “வடமாகாணத்தில் 19 வழக்குகளும், கிழக்கு மாகாணத்தில் 20 வழக்குகளும் நீதிமன்றங்களின் முன் இருந்தன… 58 பாதுகாப்புப் பிரிவினருக்கு எதிராகக் குற்றஞ் சாட்டப்பட்டிருந்த அவ்வழக்குகளில், 32 பேர் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைக்கும், நீதிக்குமான சர்வதேசத் திட்டம் தனது 2014 இன் அறிக்கையில், “குற்றமிழைத்தவர்களை அடையாளங் காணக் கூடியதாகவிருந்த பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டவர், உள்ளூர் இராணுவ முகாமில் முறைப்பாட்டைச் செய்ததும், முதலில் சென்று குளித்துவிட்டு வருமாறு கூறப்பட்டிருக்கிறார். அதன் பின்னர் அவரை அங்கிருந்து செல்லும்படி இராணுவம் பணம் கொடுக்க முயற்சித்திருக்கிறது… நீதிமன்றிற்கான மருத்துவ பரிசோதனை அறிக்கை பாலியல் தாக்குதல் இடம்பெற்றிருப்பதனை உறுதி செய்தது. வழக்கு விசாரணையின்போது… பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டவரை அச்சுறுத்தவென நூற்றுக்கும் அதிகமான இராணுவத்தினர் வந்திருந்ததாக அறிக்கையிடப்பட்டிருந்தது.

பாதிப்புக்குள்ளாக்கப்பட்ட நபர் தொடர்ச்சியாக இராணுவத்தாலும், பொலிசாராலும் துன்புறுத்தப்பட்டும், அச்சுறுத்தப்பட்டும் வந்துள்ளார்” எனக் குறிப்பிட்டுள்ளது.

கலபொட அத்த ஞானசார

இரண்டு, ஆகஸ்டு மாதம் 2018, மேன்முறையீட்டு நீதிமன்றம் வண.கலபொட அத்த ஞானசாரவினை குற்றவியல் தண்டனைச் சட்டக் கோவையின் பிரிவு 346 மற்றும் 486 இன்கீழ் குற்றவியல்சார் அச்சுறுத்தல் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு என்பவற்றுக்காகக் குற்றவாளி எனத் தீர்த்தது. ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது (He was sentenced to six years in prison). இச்சம்பவமானது ஹோமாகமவிலுள்ள நீதவான் நீதிமன்றில் ஊடகவியலாளரான பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு இடம்பெற்றுக் கொண்டிருக்கையில் வண.ஞானசார நுழைந்து அமர்விலிருந்த நீதவானையும், அத்துடன் ஒரு பெண் மனித உரிமைகள் செயற்பாட்டாளரும், பிரகீத்தின் மனைவியுமான சந்தியா எக்னலிகொடவினையும் இழிவுபடுத்தி, அச்சுறுத்தியமை தொடர்பானதாகும். அப்போதைய நீதவானினால் மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டதுடன், அங்கு, ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தினால் ஜூன் 2018இல் வழங்கப்பட்ட குற்றத்தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது ( the guilty verdict given by the Magistrate Court of Homagama in June 2018 ). இந்த ஆண்டு மே மாதம், ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன வண.ஞானசாரவிற்கு மன்னிப்பளித்தார் ( President Maithripala Sirisena pardoned Ven. Gnanasara.)

றோயல் பார்க் வழக்கு

2005ஆம் ஆண்டு கொழும்பிலுள்ள றோயல் பார்க் கட்டிடத் தொகுதியில் வைத்து, யூவோன் ஜோன்ஸன் இனை கொடூரமான முறையில் படுகொலை செய்ததால் தண்டிக்கப்பட்டு ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகின்ற ஷ்ரமந்த ஜயமஹவிற்கு, இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன ஜனாதிபதியின் மன்னிப்பினை வழங்கியிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. 20, அக்டோபர், ஞாயிறன்று இளைஞர்களுக்கான மாநாட்டில் உரையாற்றுகையில், இக்கொடூர படுகொலையினை ஜனாதிபதி “பொறுமையிழந்த ஒரு சம்பவம்” எனக் குறிப்பிட்டிருந்தார்(youth convention on Sunday 20 October, the President called the brutal murder “an incident of impatience”.)

இது ஏற்றுக் கொள்ளப்படவே முடியாதவொரு விடயம் என நாம் கருதுகிறோம். தனக்குத் தெரிந்தவொரு நபரால், கொடூரமான முறையில் ஒரு இளம் பெண் படுகொலை செய்யப்பட்டதனை நாட்டின் தலைவர் “பொறுமையிழந்த ஒரு சம்பவம்” எனக் கருதுவது அதிர்ச்சியளிக்கிறது. இதனை ஜனாதிபதி “ஒரு சிறுமியோடு வாக்குவாதப்பட்டதன்” விளைவு என்று விபரித்ததுடன் மேலும் “அச்சிறுமி” “அதன் விளைவாகக் கொலை செய்யப்பட்டாள்” என்கிறார்.

ஜோன்ஸன் மிகவும் வன்முறையாகத் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார் என்பதனை நீதிமன்ற வழக்கிலிருந்து நம்பகமான அறிக்கைகள் மற்றும் சான்றாதராங்கள் மூலமாக நாம் அறிந்திருக்கிறோம். மேலும் அநேகமாக பெண்களுக்கு எதிராக வன்முறையினைச் செய்யும் குற்றவாளிகளைப் போன்று, கட்டுப்படுத்துபவனாகவும், வன்முறையான நடத்தையை உடையவனாகவுமே அவனின் வரலாறு தொடராக இருந்திருக்கிறது என ஜோன்ஸனின் சகோதரியின் அண்மைக்கால பகிரங்க கூற்றறிக்கையின் மூலமாகவும் நாம் அறிந்திருக்கிறோம் ( sister’s most recent public statement). ஒரு இளம் ஆணால் செய்யப்பட்ட இப்பாரதூரமான வன்முறையினை அப்பட்டமாக அலட்சியப்படுத்திக் குற்றவாளியினை “சிறையிலுள்ள குழந்தை” என ஜனாதிபதி வர்ணிக்கிறார். இந்த நாட்டில் வயதுக்கு வருவதற்கான வயதெல்லை 18 ஆகும்.

“இன்று, அச்சிறுவனும் ஒரு கலாநிதிப்படிப்பை முடித்திருக்கிறான். றோயல் பார்க் சம்பவத்தின் காரணமாக சிறையிலிருக்கும் அச்சிறுவனின் தரப்பினர் ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் அவனை விடுதலை செய்யும்படி என்னை வேண்டியிருக்கின்றனர்… அவனது தண்டனைக் காலத்தை சிறந்த நடத்தையுடன் கழித்திருக்கிறான்” என ஜனாதிபதி மேலும் தெரிவித்திருந்தார்.

மதிப்பீடு, இறுக்கமான வழிகாட்டுதல்கள், மற்றும் நெறிப்படுத்தலுக்கான படிமுறைகளைக் கடந்தால் மட்டுமே ஏனைய நாடுகளில், தண்டனை வழங்கப்பட்ட சிறைக்கைதிகளின் தண்டனைக் காலத்தைக் குறைப்பது அல்லது மன்னிப்பளிப்பது இடம்பெறும். கடந்த காலங்களில் ஜயமஹவின் பலம்வாய்ந்த, செல்வாக்கான குடும்பம், ஜோன்ஸனின் குடும்பத்தாரை அச்சுறுத்தவும், பயமுறுத்தவும் பல தடவைகள் முயன்றதாக கடந்த கால அறிக்கைகளின் மூலம் எமக்குத் தெரியும். இக்கொடூர படுகொலைக்கு ஜனாதிபதி எதிர்வினையாற்றும் போக்கு, நாட்டின் அதியுயர் நீதிமன்றான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைப் புறக்கணித்தல் என்பன பலம்வாய்ந்த, செல்வாக்கான நபர்களுக்கு இந்நாட்டின் சட்டம் செல்லுபடியாகாது என்ற தகவலையே தருகிறது.

ஜனாதிபதிக்குள்ள மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தினை எதேச்சையாகப் பிரயோகிப்பதில்லை என்பதோடு, இந்த நாட்டின் நீதித்துறையைத் தரங்குறைக்கப் போவதில்லை என ஜனாதிபதி பகிரங்கமாக ஒரு கூற்றை வெளியிட வேண்டும் என நாம் கோருகிறோம். எதேச்சதிகாரமான முறையிலன்றி தமது அதிகாரத்தினை நியாயமானதும், வெளிப்படைத்தன்மையுடையதுமான முறையில் பிரயோகிக்கும்படி அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களையும் நாம் கோருகிறோம்.

மரண தண்டனை வன்முறையான நடவடிக்கைகளைத் தடுக்கப் போவதில்லை என்பதோடு ஒரு தண்டனையாக சமூகத்தினை மேலும் கொடூரமானதாக்கும் என்ற அடிப்படையில் அதற்கு எதிராக எங்களில் பலர் பிரச்சாரம் செய்திருக்கிறோம். ஆயினும், பெண்கள், ஏனைய பிரசைகளைப் போன்று, சட்டத்தின் சமமான பாதுகாப்பினையும், வன்முறையான குற்றங்களைப் புரிபவர்களை அவர்களது செயல்களுக்குப் பொறுப்புடையவர்களாக்கும் வினைத்திறனான நீதித்துறை முறைமையையும் கோருகின்றனர். தங்களுக்கெதிரான வன்முறையான குற்றங்கள் பற்றி முறையிட முன்வரும் பெண்கள் சமமாக, மரியாதையாக, கௌரவத்துடன் நடாத்தப்படுகின்ற முறைமையினை நாம் கோருகின்றோம். வன்முறையால் பாதிப்புக்குள்ளாக்கப்பட்ட பெண்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும், விசேடமாக குற்றத்தை இழைத்தவர்கள் பலம் வாய்ந்தவர்களாகவும், செல்வாக்குடையவர்களாகவும் இருக்கையில், போதிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் நாம் கோருகிறோம்.